தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

'வட்டார கடல்துறை பாதுகாப்புக்கு அனைத்துலக ஒத்துழைப்பு தேவை'

2 mins read
3ed3c42d-3c6a-41d8-8f8e-ed0012ef352d
சாங்கி கடற்படைத் தளத்தில் சிங்கப்பூர் கடற்படையின் கடல்துறை பாதுகாப்புப் பணிக் குழு, கடல்துறை பாதுகாப்பு தளபத்தியம் ஆகியவற்றை நேற்று பார்வையிட்ட தற்காப்பு மூத்த துணை அமைச்சர் ஸாக்கி முகம்மது கடற்படை வீரர்களிடம் உரையாடினார். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

கடல் பாதையைப் பாதுகாப்பாக வைத்திருப்பது சிங்கப்பூரின் விநியோக சேவையையும் இறையாண்மையைப் பாதுகாக்கிறது.

ஆனால், அதற்கு இங்குள்ள முகவைகளுக்கும் பிற நாடுகளுக்குமிடையே நெருக்கமான ஒத்துழைப்பு தேவைப்படுகிறது என்று தற்காப்பு மூத்த துணை அமைச்சர் ஸாக்கி முகம்மது நேற்று தெரிவித்துள்ளார்.

மற்ற நாடுகளுடனான கடல்சார் ஒத்துழைப்பு, கடற்கொள்ளை குறித்தும், வணிக கப்பல் போக்குவரத்து, கடத்தல் தடுப்பு நடவடிக்கைகள் போன்றவற்றிலும் சிங்கப்பூர் கடற்படை நுண்ணறிவைப் பெற உதவுகிறது என்றார் அவர்.

"சிங்கப்பூருக்கு அனைத்துலக சமூகத்திடமிருந்து நல்ல ஆதரவு கிடைத்துள்ளது. இது சிங்கப்பூருக்கு சிறந்த உதவியாக உள்ளது. உளவுத்துறை தகவல்கள் மிரட்டல்களை பகுத்தாய உதவுகிறது," என்று அமைச்சர் சாக்கி கூறினார்.

சாங்கி கடற்படை தளத்திற்கு நேற்று வருகையளித்த அமைச்சர், செய்தியாளர்களிடம் இதனைத் தெரிவித்தார்.

சிங்கப்பூர் தான் சேகரித்த உளவுத் தகவல்களைக் கொண்டு, மற்ற நாடுகளுக்கு உதவியுள்ளது.

சிங்கப்பூர் கடல்துறை பாதுகாப்பு மையமாக உருவாக இது உதவுகிறது என்று அமைச்சர் ஸாக்கி சுட்டினார்.

கடந்த மாதம் ஆசியாவில் கப்பல்களுக்கு எதிராக மூன்று ஆயுதக் கொள்ளை சம்பவங்கள் நடந்ததாக, ஆசியாவில் கப்பல்களுக்கு எதிரான கொள்ளை, ஆயுதக் கொள்ளைகளை எதிர்ப்பதற்கான வட்டார ஒத்துழைப்பு உடன்பாடு (ரீகாப்) தகவல் பகிர்வு மையம் (ஐஎஸ்சி) நேற்று தெரிவித்தது.

இந்த மூன்று சம்பவங்களில், இரண்டு சிங்கப்பூர் நீரிணையில், கிழக்கு நோக்கிச் செல்லும் போக்குவரத்து தடம் பிரியும் பாதையில் ஏற்பட்டன.

இத்துடன், முக்கியமான இந்த நீர்வழியில் இத்தகைய ஐந்து சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

கடந்த ஆண்டு சிங்கப்பூர் ஜலசந்தியில் கொள்ளை, ஆயுதக் கொள்ளை சம்பவங்களின் எண்ணிக்கை, கடந்த ஐந்து ஆண்டுகளில் ஆக அதிகளவாக, 34 சம்பவங்களாகப் பதிவாகியுள்ளன.

கடந்த ஆண்டின் கொள்ளைச் சம்பவ அதிகரிப்பு தொற்றுநோய் பரவலின்போது நிகழ்ந்ததாகக் குறிப்பிட்டார்.

மேலும், "பொருளாதார வீழ்ச்சியும் வாய்ப்புகளை எதிர்பார்க்கும் மக்களும் இதற்கு ஒரு காரணம்," என்றார் அவர்.

கொள்ளைநோய் பரவல் இருந்தபோதும் சிங்கப்பூரின் நீர்ப்பகுதியைப் பாதுகாப்பதில் சிங்கப்பூர் கடற்படை தனது செயற்பாட்டை தொடர்ந்ததை திரு ஸாக்கி சுட்டினார்.

கடற்படை பாதுகாப்பு மிரட்டல்கள் தொடர்ந்து சிக்கலானதாகி வருவதாகச் சொன்ன அவர், கடற்படையின் முழுநேர அதிகாரிகளும் தேசிய சேவையாளர்களும் இந்த சவால்களை எதிர்கொள்ள தங்களைத் தயார்ப்படுத்திக்கொள்வர் என்று நம்பிக்கையளித்தார்.

கடல்துறை மிரட்டல்களை எதிர்கொள்ள, சிங்கப்பூர் கடற்படை பாதுகாப்புப் பணிக்குழு, ஏனைய தேசிய கடற்படை முகவைகளுடனும் அனைத்துலக பங்காளிகளுடனும் தகவல் பகிர்வு மையத்தின் மூலம் அணுக்கமாகச் செயல்படுகிறது.

ஒரு வட்டார அமைப்பான தகவல் பகிர்வு மையம், கடல்துறை மிரட்டல்களை எதிர்கொள்ள பல நாடுகளுக்கிடையே தகவல்களைப் பகிர்வதுடன் அனைத்துலக கடற்படைகள், கரையோர பாதுகாவல் துறை, கடல்துறை முகவைகளுடன் இணைந்து செயல்படுகிறது.