அடுத்த மாதத்துக்குள் சிங்கப்பூரில் உள்ள 71 யூனிட்டி மருந்துக்கடைகளில் பணிபுரியும் நூற்றுக்கணக்கான வர்த்தக உதவியாளர்களுக்கு வன்முறையால் பாதிக்கப்பட்டுள்ளதற்கான அறிகுறிகளை அடையாளம் காண பயிற்சி அளிக்கப்படும்.
இதன்மூலம் குடும்ப வன்முறை பற்றி புகார் செய்யவும் பாதிக்கப்பட்டோர் உதவி நாடவும் இந்தத் திட்டம் வழிவகுக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
குடும்ப வன்முறையால் பாதிக்கப்பட்டவர்களை சமூக அளவில் அடையாளம் காண்பதை வலுப்படுத்த சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சுடன் யூனிட்டி செயல்படுகிறது.
கடந்த நவம்பர் மாதத்திலிருந்து 42 யூனிட்டி மருந்துகடைகளில் பணிபுரியும் மருந்தாளர்களுக்கு இப்பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.
குடும்ப வன்முறையால் பாதிக்கப்பட்டதற்கான அறிகுறிகளை அடையாளம் காண பயிற்சி அளிக்கப்பட்ட மருந்தாளர்களை விவோசிட்டியில் உள்ள யுனிட்டி மருந்துக்கடையில் சமுதாய, குடும்ப மேம்பாட்டு துணை அமைச்சர் சுன் சூலிங் இன்று சந்தித்துப் பேசினார்.

