தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள மியன்மார் தலைவர் ஆங் சான் சூச்சி, சட்டவிரோதமான முறையில் பணம், தங்கம் ஆகியவற்றைப் பெற்றுக்கொண்டதாக அந்நாட்டு ராணுவம் குற்றம் சுமத்தியுள்ளது.
மியன்மாரில் ஜனநாயகமுறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தை கடந்த மாதம் 1ஆம் தேதியன்று ராணுவம் கவிழ்த்தது.
ராணுவ ஆட்சியை எதிர்த்து மியன்மாரெங்கும் பல ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், ஆர்ப்பாட்டக்காரர்களைக் குறிவைத்து பாதுகாப்புப் படையினர் துப்பாக்கியால் சுட்டதில் இன்று எட்டு பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டது.
ஆர்ப்பாட்டம் அமைதியான முறையில் நடைபெற்றதாகவும் பாதுகாப்புப் படையினர் ஈவிரக்கமின்றி வன்முறையை கட்டவிழ்த்ததாக சம்பவத்தை நேரில் கண்டவர்கள் கூறினர்.
மியன்மார் மக்களுக்கு எதிராக அந்நாட்டு ராணுவம் வன்முறை பயன்படுத்துவதை மனித உரிமை அமைப்புகள் கண்டித்துள்ளன.
இதற்கிடையே, தேவை ஏற்பட்டால் மட்டுமே ஆர்ப்பாட்டக்காரர்களை வலுகட்டாயமாக கலைக்க நடவடிக்கை எடுக்கப்படுவதாக மியன்மார் ராணுவத்தின் செய்தித்தொடர்பாளரான பிரிகேடியர் ஜெனரல் சோ மின் துன் இன்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
திருவாட்டி சூச்சி ஆட்சி அதிகாரத்தில் இருந்தபோது சட்டவிரோதமாக $805,000 பணமும் தங்கமும் பெற்றுக்கொண்டதாக அவர் கூறினார்.
இதுகுறித்து யங்கூன் நகரின் முன்னாள் முதல்வர் பியோ மியேன் தேன் புகார் செய்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
புகார் குறித்து பலமுறை விசாரணை நடத்தி உறுதி செய்துவிட்டதாக கூறிய பிரிகேடியர் ஜெனரல் சோ, தற்போது ஊழல் தடுப்புப் பிரிவு அதுகுறித்து விசாரணை நடத்துவதாகக் கூறினார்.

