கழிவுகளைச் சுத்திகரிக்கும் ஒருங்கிணைந்த ஆலையுடன் கூடிய உள்ளூர் நிறுவனம், சுற்றுச்சூழலுக்கு உகந்த முறையில் நிறுவனங்கள் செயல்பட நல்ல எடுத்துக்காட்டாக இருக்கிறது என்று வர்த்தக, தொழில் அமைச்சர் சான் சுன் சிங் பாராட்டி இருக்கிறார். '800 சூப்பர்' என்ற அந்த நிறுவனம், கம்போடியாவில் சிறப்பாக விரிவடைந்துள்ளது. இந்த முயற்சியில் வேறு ஓர் உள்ளூர் நிறுவனத்தையும் அது கைதூக்கி விடுகிறது. சுற்றுப்புறத்துக்குச் சாதகமான நடைமுறைகளுடன் அனைத்துலக மயமாகி, அந்த முயற்சியில் உள்ளூர் நிறுவனத்தையும் ஈடுபடுத்தி வளர்த்துவிடும் ஓர் அணுகுமுறைக்கு 800 சூப்பர் நிறுவனம் நல்ல எடுத்துக்காட்டு என்று அமைச்சர் குறிப்பிட்டார். 800 சூப்பர் நிறுவனத்தின் கழிவு சுத்திகரிப்பு ஆலை துவாசில் செயல்படுகிறது. அமைச்சர் திரு சான் நேற்று அந்த ஆலைக்குச் சென்று இருந்தார். கழிவுகளைச் சுத்திகரிக்கும் முறை மூலம் உருவாகும் எரிசக்தியைக் கொண்டு அந்த நிறுவனம் கரிமத்தை வெளியிடாத, சுற்றுச்சூழலுக்கு உகந்த தொழில்துறை சலவைச் சேவையை வழங்குகிறது. 800 சூப்பர் நிறுவனம் கம்போடியாவில் தன் தொழிலை விரிவுபடுத்த ஏதுவாக அதற்கு கடந்த ஜனவரியில் US$46 மில்லியன் (S$61.7 மில்லியன்) பத்து ஆண்டு ஒப்பந்தம் கொடுக்கப்பட்டது. அந்த நிறுவனம். நோம்பென் நகரில் குப்பைக் கழிவுகளைச் சேகரிப்பது, சாலைகளைத் தூய்மைப்படுத்துவது ஆகிய சேவைகளை வழங்கி வருகிறது. இதற்கு ஆதரவாக ஐஸீம் (iZeem) என்ற மற்றொரு சிறிய, நடுத்தர உள்ளூர் நிறுவனத்தை அந்த நிறுவனம் ஈடுபடுத்திக் கொள்ளும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. "தேவைப்படும் தரங்களை எட்டியதும் நிறுவனங்கள் இந்த வட்டாரத்தின் இதர பகுதிகளுக்கு விரிவடைய முடியும். இதே போன்ற சேவைகளை அங்கும் வழங்க முடியும். இந்த வட்டாரத்தில் இத்தகைய சேவைகள் மிக முக்கிய இடம்பெறும்," என்றார் அமைச்சர். "சுற்றுச்சூழலுக்கு உகந்த நடைமுறையைத் தழுவிக்கொண்டு பசுமைக்கு ஆதரவு தரும் அணுகுமுறையை நம்முடைய நிறுவனங்கள் கடைப்பிடிக்க வேண்டும் என்பதே நமது விருப்பம். இதற்கு மிக அருமையான ஓர் எடுத்துக்காட்டாக 800 சூப்பர் நிறுவனம் திகழ்கிறது," என்று அமைச்சர் குறிப்பிட்டார். அரசாங்கம் பல்வேறு செயல்திட்டங்களின் மூலம் இதுபோன்ற நிறுவனங்களுக்குத் தொடர்ந்து ஆதரவு அளிக்கும் என்றும் திரு சான் உறுதி கூறினார். உள்ளூர் நிறுவனங்கள், வெளிநாடுகளில் விரிவடைய உதவும் என்டர்பிரைஸ் சிங்கப்பூர் அமைப்பின் பல்வேறு திட்டங்களைக் குறிப்பிட்ட அவர், அனைத்துலக அளவில் அங்கீகரிக்கப்பட்டு உள்ள தரங்களையும் சான்றிதழ்களையும் கைக்கொள்ள உள்ளூர் நிறுவனங்களுக்கு உதவி கிடைப்பதையும் சுட்டிக்காட்டினார். கழிவுகளைச் சுத்திகரிக்கும் தொழில்துறையின் சேவைகளுக்கான தேவை சிங்கப்பூரிலும் உலகளவிலும் அதிகரிக்கும் என்றும் அவர் தெரிவித்தார். உலக கழிவு சுத்திகரிப்புச் சந்தையின் மதிப்பு 2019ல் US$2 டிரில்லியன். இது 2027ல் US$2.3 டிரில்லியனை எட்டும் என்று எதிர் பார்க்கப்படுகிறது. இதைப் போலவே பிளாஸ்டிக், உணவு, மின்னணுப் பொருட்கள் போன்ற கழிவுகளைச் சுத்திகரிக்கும் தொழில்துறையும் அடுத்த சில ஆண்டுகளில் கணிசமாக வளர்ச்சி காணும் என்று தெரிகிறது.
பசுமைக்கு ஆதரவு; உள்ளூர் நிறுவனத்துக்கும் உதவிக்கரம்
2 mins read
வர்த்தக, தொழில் அமைச்சர் சான் சுன் சிங், நேற்று '800 சூப்பர்' என்ற நிறுவனத்தில் முற்றிலும் தானியக்கமய சலவைக் கூடத்தைப் பார்வையிட்டார். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

