பிரிட்டிஷ் காலனித்துவத்தின்போது பூமலையில் கட்டப்பட்ட பங்களா வீட்டில் காலனித்துவக் கலைப்பொருட்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.
இந்தக் கண்காட்சி இன்று தொடங்கியது. கெலப் ஹவுஸ் எண். 7 பங்களா வீட்டை தேசிய பூங்காக் கழகம் பூமலை ஓவியக் கண்காட்சிக் கூடமாக மாற்றியுள்ளது.
பூமலை ஆவணக் காப்பகத்தில் இருந்த ஏறத்தாழ 2,000 ஓவியங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.
ஆறு மாதங்களுக்கு ஒருமுறை காப்பகத்தில் உள்ள ஓவியங்கள் மாறி மாறி காட்சிக்கு வைக்கப்படும்.
ஒரே நேரத்தில் கிட்டத்தட்ட 100 ஓவியங்கள் காட்சிக்கு வைக்கப்படும்.
இந்தக் கண்காட்சியைத் துணைப் பிரதமர் ஹெங் சுவீ கியட் இன்று அதிகாரபூர்வமாக திறந்துவைத்தார்.
"பூமலை ஆவணக் காப்பகத்திலிருந்து இவ்வளவு கலைப்பொருட்கள் காட்சிக்கு வைக்கப்படுவது இதுவே முதல்முறை. தாவரவியல் தொடர்பான ஓவியங்களை ஆய்வுக்குப் பயன்படுத்துதல், தாவரவியல் நிபர்ணர்களுக்கும் ஓவியர்களுக்கும் இடையிலான ஒருங்கிணைப்பு ஆகியவற்றின் முக்கியத்துவம் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்த விரும்புகிறோம். இந்தக் காட்சிக்கூடம் வரலாற்றை மட்டும் உணர்த்துவதற்கானதல்ல. காட்சிப் பொருட்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்," என்று பூமலையில் மூத்த ஆய்வாளரும் கண்காட்சியின் மேற்பார்வையாளருமான டாக்டர் மிஷேல் ரோட்டா தெரிவித்தார்.