பள்ளிக்கூட ஆசிரியர்கள், முதல்வர்கள் மற்றும் பணியாளர்கள் அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள முன்வரவேண்டும் என கல்வி அமைச்சர் லாரன்ஸ் வோங் அழைப்பு விடுத்துள்ளார். தங்களையும் மாணவர்களையும் கொவிட்-19 கிருமி தொற்றாமல் பாதுகாத்துக்கொள்ள தலைசிறந்த வழி அதுதான் என்று அவர் தெரிவித்துள்ளார். ஆங்லிக்கன் உயர்நிலைப் பள்ளியின் 65வது ஆண்டுவிழா கொண்டாட்டம் நேற்று நிகழ்ந்தபோது அதில் கலந்துகொண்டு பேசியபோது அமைச்சர் இவ்வாறு வலியுறுத்தினார். கல்வி நிலையங்களில் பணியாற்றும் 150,000க்கும் மேற்பட்டோருக்கு பலனளிக்கும் விதமாக சிங்கப்பூரின் தடுப்பூசி இயக்கம் விரிவுபடுத்தப்பட்டு உள்ளது. மூத்தோருக்கு தடுப்பூசி போடு வதில் இருந்து தொடங்கிய இயக்கம், வேகமடைந்து வருகிறது. அதிகமான தடுப்பூசி மருந்துகள் சிங்கப்பூரை வந்தடைந்துள்ளதைத் தொடர்ந்து ஆசிரியர்கள் உள்ளிட்ட அத்தியாவசியப் பணியாளர்கள், அதிக ஆபத்தில் உள்ள குழுவினர் போன்றோருக்கும் தடுப்பூசி பணி விரிவுபடுத்தப்பட்டுள்ளது. குழந்தைகளுடனும் இளையோரிடமும் அதிக நேரம் செலவிடுவதால் ஆசிரியர்கள் இத்திட்டத்தில் பலன்பெற உட்படுத்தப்பட்டதாக சுகாதார அமைச்சு கூறியிருந்தது. 16 வயதுக்கு உட்பட்டோருக்கு தடுப்பூசி போட இன்னும் பரிந்துரைக்கப்படவில்லை. இவ்வேளையில், ஆங்லிக்கன் உயர்நிலைப் பள்ளியைச் சேர்ந்த ஆசிரியர்கள் மற்றும் பணியாளர் களில் 90 விழுக்காட்டினர் தடுப்பூசி போட்டுக்கொள்ள இது வரை பதிந்துகொண்டுள்ளதாக அந்தப் பள்ளியின் முதல்வர் கூ ட்ஸி ஹோர்ங், 54, தெரிவித்தார். இதனிடையே, இந்தப் பள்ளியின் ஆண்டுவிழா கொண்டாட்டம் கொவிட்-19 காரணமாக சிறிய அளவில் ஏற்பாடு செய்யப்பட்டது. மாணவர்கள், ஊழியர்கள், முன்னாள் மாணவர்கள், சிறப்பு வருகையாளர்கள் உட்பட ஏறத்தாழ 120 பேர் நேற்று அப்பர் சாங்கி ரோட்டில் இருக்கும் முகாமுக்குச் சென்று மறுபயனீட்டு முகக்கவசங்களால் ஆன முகக்கவசத் தொகுப்பு ஒன்றை வழங்கினர். கடந்த மாதங்களில் வெவ்வேறு வகையான 1,500 முகக்கவசங்களை கழுவி, சுத்தப்படுத்தி அலங்காரமாக மாற்றிய மாணவர்கள் பள்ளிக்கு வாழ்த்து தெரிவிக்கும் வாசகங்களை அதில் எழுதினர். முகக்கவசங்களால் அலங் கரிக்கப்பட்ட ஓவியத்திரை ஆகப்பெரிய முகக்கவசத் தொகுப்பாக சிங்கப்பூர் சாதனைப் புத்தகத்தில் இடம்பிடித்துள்ளது. கொள்ளைநோய் பரவல் போன்ற சிரமமான காலத்திலும் திறமையை வெளிப்படுத்தும் பள்ளியின் குழு உணர்வும் உன்னதமும் இந்தச் சாதனை மூலம் வெளிப்பட்டதாக ஆங்கிலிக்கன் பள்ளியின் குடியுரிமை கல்விப் பிரிவின் தலைவர் இயோ யோங் கெங், 43, குறிப்பிட்டார்.
பள்ளிப் பணியாளர்கள் தடுப்பூசி பெற அழைப்பு
2 mins read
பள்ளிக்கூட ஆசிரியர்கள், முதல்வர்கள் மற்றும் பணியாளர்கள் அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள முன்வரவேண்டும் என கல்வி அமைச்சர் லாரன்ஸ் வோங் அழைப்பு விடுத்துள்ளார். படம்: GOV.SG -

