விடுதி ஊழியர் நல்வாழ்வை உறுதிப்படுத்த தீவிர முயற்சி

விடுதி ஊழியர் நல்வாழ்வை உறுதிப்படுத்த தீவிர முயற்சி

2 mins read
bab14b88-bb99-45b0-b649-b81511696663
-

வெளிநாட்டு ஊழியர் விடுதிகளில் உள்ளவர்களின் நல்வாழ்வில் தீவிர கவனம் செலுத்தப்படுகிறது என்பதை உறுதிப்படுத்த அரசு தொடர்ந்து மும்முரமாகச் செயல்பட்டு வருவதாக பிரதமர் லீ சியன் லூங் தெரிவித்து இருக்கிறார்.

சிங்கப்பூரில் கொவிட்-19 கிருமி இன்னமும் இருப்பதால் பொதுமக்களுடன் தாராளமாகக் கலந்துறவாடும் வகையில் விடுதிகளைச் சேர்ந்த வெளிநாட்டு ஊழியர்களை அனுமதிப்பது ஆபத்தாகிவிடும் என்றும் அவர் கூறினார்.

பிரதமர் பிபிசிக்கு பேட்டி அளித்தார். அது இன்று ஒளிபரப்பப்பட்டது. கொவிட்-19 தொற்றின்போது கடுமையான கட்டுப்பாடுகளை மீறாமல் நடந்துகொண்டு ஒத்துழைத்ததற்காக அரசாங்கம் அந்த ஊழியர்களுக்கு மிகவும் நன்றி கூறுவதாகவும் திரு லீ பேட்டியில் தெரிவித்தார்.

சிங்கப்பூரில் சென்ற ஆண்டு ஏப்ரல் மாத வாக்கில் வெளிநாட்டு ஊழியர் விடுதிகளில் தொற்று அதிகமாக இருந்தது. ஏறக்குறைய ஓராண்டுகள் ஓடிவிட்டன. என்றாலும் வெளிநாட்டு ஊழியர்கள் விடுதிகளைவிட்டு தாராளமாக வெளியே இன்னமும் அனுமதிக்கப்படவில்லை.

இது பற்றி கேட்டதற்குப் பதிலளித்த திரு லீ, வெளிநாட்டு ஊழியர்களில் ஏறத்தாழ பாதிப்பேருக்கு முன்பு தொற்று இருந்தது என்பது பரிசோதனைகள் மூலம் தெரியவந்துள்ளது என்றார்.

இதைக் கணக்கிட்டுப் பார்க்கையில் அவர்களில் பாதிப்பேர் இன்னமும் கிருமித்தொற்றுக்கு எளிதில் இலக்காகக்கூடிய நிலையில் இருக்கிறார்கள் என்பது தெரிகிறது என்றாரவர்.

எப்போதுமே விடுதி அறையிலேயே அடைந்துகிடப்பதைத் தவிர்க்கும் ஏற்பாடுகளைச் செய்து வருவதாக திரு லீ கூறினார். வெளிநாட்டு ஊழியர்களைப் பாதுகாப்பாக வைத்திருக்க முயலும் அதேவேளையில், சொந்த மக்களையும் உடல் ரீதியாக மட்டுமின்றி மனரீதியிலும் பாதுகாப்பாக வைத்திருக்க நாம் முயன்று வருகிறோம் என்று திரு லீ குறிப்பிட்டார்.

முடிந்த போதெல்லாம் விடுதிகளில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுகின்றன. விடுதி ஊழியர்கள் சமையலறை, உடற்பயிற்சிக் கூடம், கூடைப்பந்து விளையாட்டு இடங்கள் போன்ற சமூக வசதிகளைப் பயன்படுத்திக்கொள்ள அனுமதிக்கப்படுகிறார்கள்.

சில விடுதிகளைச் சேர்ந்த ஊழியர்கள், மாதம் ஒரு முறை சமூகத்திற்குத் திரும்ப அனுமதிக்கும் ஒரு முன்னோடித் திட்டம் இடம்பெறவிருக்கிறது.

தடுப்பூசி இயக்கம் வெளிநாட்டு ஊழியர்களையும் உள்ளடக்கும் வகையில் வேகப்படுத்தப்படும் என்று அண்மையில் சுகாதார அமைச்சு தெரிவித்து இருக்கிறது.

தொடக்கமாக இங்குள்ள ஐந்து ஆகப் பெரிய விடுதிகளில் வசிக்கின்ற, கொவிட்-19க்கு இதுவரை ஆளாகாத 10,000 வெளிநாட்டு ஊழியர்களுக்குத் தடுப்பூசி போடப்படும்.

சென்ற ஆண்டில் விடுதிகளில் தொற்று ஏற்பட்டது எப்படி என்பது பற்றி கருத்து கூறிய பிரதமர், அணுக்கமாக அறைகளில் வசிப்பதால் எப்போதுமே வெளிநாட்டு ஊழியர்களுக்கு தொற்று ஆபத்து உண்டு என்று கூறினார்.

விமானங்களில், கப்பல்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கும் தாதிமை விடுதிகளில் பணியாற்றுவோருக்கும் இதே நிலைதான் என்று அவர் தெரிவித்தார்.

"வெளிநாட்டு ஊழியர்கள் நன்கு ஒத்துழைத்தார்கள். இதற்காக நன்றி கூறுகிறோம். இப்போது நாம் பாதுகாப்பான நிலையில் இருக் கிறோம்," என்று திரு லீ கூறினார்.