பொருளியல் மீட்சி ஏற்ற இறக்கமாக இருக்கிறது. ஆற்றல்மிக்கவர்களைக் கவர்ந்து ஈர்க்க உலகளவில் போட்டி கடுமையாகிறது. இந்தச் சூழ்நிலையில் நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களின் ஆற்றல் மேம்பட முதலீடு செய்ய வேண்டும் என்று துணைப் பிரதமர் ஹெங் சுவீ கியட் வலியுறுத்திக் கூறி இருக்கிறார்.
காலத்திற்கேற்ப உருமாறிக்கொண்டு, இப்போது இருப்பதைவிட இன்னும் வலுவாக கொவிட்-19 பாதிப்புகளில் இருந்து மீண்டுவர ஏதுவாக நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களின் ஆற்றல் மேம்பட முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
சாவ் பாவ் சிங்கப்பூர் வரவுசெலவுத் திட்டம் 2021 வணிகக் கருத்தரங்கு நேற்று நடந்தது.
அதில் கலந்துகொண்டு பேசிய நிதி அமைச்சருமான திரு ஹெங், நிறுவனங்களும் ஊழியர்களும் அணுக்கமாகச் சேர்ந்து செயல்படக்கூடிய வழிகளைக் கோடிகாட்டினார். 'ஒன்றிணைந்த சிங்கப்பூர் இயக்கத்திற்கான செயற்கூட்டணி' களில் சேர்வது முதலாவது வழி. அந்த அணிகள், தொழில்துறை மற்றும் சமூகத்தின் ஒட்டுமொத்த பலத்தை வலுப்படுத்தி பிரச்சினைகளுக்குச் செம்மையாகத் தீர்வு காண முடியும்.
"நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களுடன் நீண்டகால உறவுகளைக் கருத்தில்கொண்டு ஊழியர்களின் தேர்ச்சிகளை மேம்படுத்தி, உற்பத்தித் திறனைப் பெருக்க வேண்டும். இவற்றின் விளைவாக தொழில்துறைகள் அதிக போட்டித்திறனுடன் திகழும்," என்று அவர் கூறினார்.
உள்ளூர் திறமையாளர்களைச் சிறந்த முறையில் உருவாக்க வேண்டும் என்று கூறிய அவர், சிறப்புத் தேர்ச்சி பெற்ற வெளிநாட்டினரையும் நாம் கவர்ந்து ஈர்க்க வேண்டும் என்று குறிப்பிட்டார். நிறுவனங்கள் சமூகத்திற்கு உதவ வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
பொருளியல் நிச்சயமில்லாத நிலை, அமெரிக்கா-சீனா பதற்றங்கள், அமெரிக்காவின் S$2.6 டிரில்லியன் கொவிட்-19 மீட்சித் திட்டம், சீனாவின் பொருளியல் உத்தி, ஆசியான் உள்ளிட்டவை பற்றியும் அவர் கருத்துரைத்தார்.
வீட்டிலிருந்து வேலை பார்க்கும் முறை பற்றி கருத்துக் கூறிய துணைப் பிரதமர், அத்தகைய ஒரு முறை சிங்கப்பூரை பொறுத்தவரை சாத்தியமானதாகத் தெரியவந்துள்ளது என்றார்.
"இப்போது ஆற்றலை பேணி வளர்ப்பதுதான் மிக முக்கியமானது. நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களின் தேர்ச்சிகள் மேம்பட ஆதரவு அளிக்கும்.
"சிங்கப்பூர் ஐக்கியமாக, வலுவாக மீண்டெழ ஒவ்வொரு நிறுவனமும் வரவுசெலவுத் திட்ட நடவடிக்கைகளை நல்ல முறையில் பயன்படுத்திக்கொள்ளும்," என்று தான் நம்புவதாகத் திரு ஹெங் கூறினார்.
பசுமைக்கு மாறுக
சுற்றுச்சூழலுக்கு உகந்த அணுகுமுறையைக் கைக்கொள்வது, சிங்கப்பூர் நிறுவனங்கள் போட்டித்திறனுடன் திகழ உதவும் என்று கூறிய துணைப் பிரதமர், அரசுத் திட்டங்களின் அனுகூலத்தைப் பயன்படுத்திக்கொண்டு முன்னேறும்படி உள்ளூர் நிறுவனங்களை வலியுறுத்தினார்.

