தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கிவிட்ட நிலையில் கட்சி களின் தேர்தல் அறிக்கைகளை வைத்துப் பார்த்தால் அதிமுகவை நம்புவதா, திமுகவை ஆதரிப்பதா என்பதைக் கணிக்க முடியாமல் வாக்காளர்கள் திணறுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
'நீ எட்டடி பாய்ந்தால் நான் பதினாறு அடி பாய்வேன்' என்ற பாணி யில் திமுகவுக்குப் பதிலடியாக அதிமுக பல்வேறு சலுகைகளை, இலவசங்களைத் தேர்தல் அறிக்கையில் அள்ளி வீசி இருப்பதை அடுத்து, தமிழ்நாடு தாங்குமா என்ற சந்தேகம் கிளம்பிவிட்டதாக கவனிப்பாளர்கள் கூறுகிறார்கள்.
இந்த இரண்டு கட்சிகளும் இப்போது அறிவித்து இருப்பதைப் போல இதுவரையில் எந்தவொரு தேர்தலிலும் இலவசங்களும் சலுகைகளும் அறிவிக்கப்படவில்லை.
நினைத்துப் பார்க்கக்கூட முடியாதவற்றை எல்லாம் இந்த இரண்டு கட்சிகளும் அறிவித்துள்ளன.
குலவிளக்குத் திட்டத்தின் கீழ் ரூ. 1,500, இலவச வீடுகள், வாஷிங்மிஷின், வீட்டுக்கு ஒருவருக்கு அரசுப் பணி உள்ளிட்ட பலவும் அதிமுக தேர்தல் அறிக்கையில் இருப்பது ஏராளமான மக்களிடம் வியப்பைக் கிளப்பிவிட்டுள்ளது.
முக்கிய எதிர்க்கட்சியான திமுக, படிக்கவே முடியாத அளவுக்கு 500 திட்டங்களுடன் கூடிய தேர்தல் அறிக்கையைச் சில நாட்களுக்கு முன் அறிவித்தது.
அவற்றில் ஒவ்வொன்றுக்கும் பதிலடியாக அவற்றை விஞ்சும் வகையில் அதிமுக பல்வேறு சலுகைகளையும் திட்டங்களையும் இலவசங்களையும் அறிவித்துள்ளது வாக்காளர்களைக் குழப்பத்தில் ஆழ்த்திவிட்டதாகத் தெரிகிறது.
"ஏற்கெனவே தமிழகம் பெரும் கடன் சுமையில் உள்ளது. கட்சிகள் இப்போது அறிவித்து இருக்கும் திட்டங்களை எல்லாவற்றையும் நிறைவேற்றுவது நூற்றுக்குநூறு இயலாததாகவே இருக்கும்.
"தேர்தல் அறிக்கையை எந்தவொரு கட்சி நிறைவேற்றினாலும் தமிழகம் திவாலாகிவிடும்," என்று வல்லுநர்கள் கூறுகிறார்கள்.
மாநிலம் ஏற்கெனவே இலவசங்களில் முன்னிலையில் இருப்பதால், கட்சி அறிக்கைகளைக் கண்டு வாக்காளர்களில் பலரும் அழுவதா, சிரிப்பதா என்பது தெரியாமல் கவலை, குழப்பம், வியப்பு, எதிர்பார்ப்புடன் உள்ளதாக கவனிப் பாளர்கள் கணிக்கிறார்கள்.

