தொடர்ந்து ஆறாவது நாளாக நாளொன்றுக்கு 20,000க்கும் மேற்பட்டோர் கொவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டதை அடுத்து, இந்தியாவின் சில மாநிலங்கள் கட்டுப்பாடுகளை அதிகப்படுத்தியுள்ளன.
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 24,292 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டதாகவும் அதனால் மேலும் 131 இறந்து விட்டதாகவும் மத்திய சுகாதார அமைச்சு வெளியிட்ட புள்ளி விவரங்கள் கூறுகின்றன. இதை அடுத்து, மொத்த பாதிப்பு 11.41 மில்லியனாகவும் மரண எண்ணிக்கை 158,856ஆகவும் அதிகரித்தது.
அதிக பாதிப்புக்குள்ளான மகாராஷ்டிராவில் இம்மாத இறுதி வரை திரையரங்குகள், ஹோட்டல்கள், உணவகங்களின் கொள்ளளவில் பாதிப் பேருக்கு மேல் அனுமதிக்கக்கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது. அங்கு சில மாவட்டங்களில் பொது முடக்கநிலை அறிவிக்கப்பட்டு உள்ளது.
குஜராத்தின் அகமதாபாத், சூரத், வதோதரா, ராஜ்கோட் ஆகிய நகரங்களில் இன்று முதல் 31ஆம் தேதி வரை இரவு நேர ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. அகமதாபாத் விளையாட்டரங்கில் இடம்பெறும் இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோதும் இறுதி மூன்று டி20 போட்டிகளின்போது ரசிகர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள்.
இந்நிலையில், கொரோனா நிலவரம் குறித்தும் தடுப்பூசி நடவடிக்கைகள் குறித்தும் பிரதமர் மோடி இன்று நண்பகலில் காணொளி வழியாக எல்லா மாநில முதல்வர்களுடனும் ஆலோசனை நடத்த இருக்கிறார்.
இதனிடையே, இந்தியாவில் இதுவரை இல்லாத வகையில் நேற்று முன்தினம் மட்டும் மூன்று மில்லியனுக்கும் மேற்பட்டோருக்கு கொவிட்-19 தடுப்பூசி போடப் பட்டது.

