கிருமிப் பரவல் நிலவரம் பிலிப்பீன்சிலும் மோசமடைந்து வருகிறது. அங்கு தினமும் பதிவாகும் தொற்றுச் சம்பவங்களின் எண்ணிக்கை கடந்த நான்கு நாட்களாக 20,000 என்ற அளவில் நீடிக்கிறது. அதனால் நாடு பெரிய அளவிலான முடக்கத்திற்குத் திட்டமிடுவது தவிர்க்க முடியாதது என்று பிலிப்பீன்ஸ் சுகாதார அமைச்சர் நேற்று தெரிவித்தார்.
கடந்த ஆண்டு கொரோனா கிருமி வேகமாகப் பரவியபோது கடுமையான கட்டுப்பாடுகளை பிலிப்பீன்ஸ் அமல்படுத்தியது. உலகளவில் நீண்ட கால முடக்கத்தை அறிவித்த நாடுகளின் வரிசையில் அந்நாடும் இடம்பிடித்தது. இன்று வரை அங்கு பள்ளிக்கூடங்கள் மூடப்பட்டுள்ளன. ஒரு வட்டாரத்திலிருந்து இன்னொரு வட்டாரத்திற்குள் நுழை வதற்கான தடையும் நீடிக்கிறது.
இத்தகைய கட்டுப்பாடுகள் காரணமாக படிப்படியாகக் கட்டுக்குள் வந்த தொற்று நிலவரம் தற்போது மீண்டும் விஸ்வரூபம் எடுத்து வருகிறது.
அதனால் மறுபடியும் கடுமையான நடவடிக்கைகளை அறிமுகப்
படுத்த பிலிப்பீன்ஸ் அரசாங்கம் வேகமாகச் செயல்பட்டு வருகிறது. அதன் தொடக்கமாக, நாளை மறுதினம் (மார்ச் 20) முதல் வெளிநாட்டுப் பயணிகள் பிலிப்பீன்சுக்குள் நுழைய தடை விதிக்கப்படுகிறது. வெளிநாடுகளிலிருந்து நாடு திரும்பும் பிலிப்பீன்ஸ் குடிமக்கள் மட்டுமே உள்ளே வரலாம். அவர்களின் எண்ணிக்கையும் நாள் ஒன்றுக்கு 1,500 என வரம்பு விதிக்கப்பட்டுள்ளது.

