கொவிட்-19 தொற்று ஒரு பருவகால நோயாக மாற வாய்ப்புள்ளது போல் தோன்றுகிறது என ஐக்கிய நாட்டு நிறுவனம் தெரிவித்துள்ளது. அதனால், வானிலைக் காரணிகளின் அடிப்படையில் கொரோனா கட்டுப்பாடுகளைத் தளர்த்த வேண்டாம் என அந்த அமைப்பு எச்சரித்துள்ளது.
கடந்த 2019ஆம் ஆண்டு இறுதியில் சீனாவில் முதன்முதலாகத் தலைகாட்டத் தொடங்கிய கொரோனா கிருமியால் உலகில் இதுவரை கிட்டத்தட்ட 2.7 மில்லியன் பேர் மாண்டுவிட்டனர்.
கொரோனா தொற்று தொடர்பான இன்னும் பல மர்மங்கள் நீடிக்கும் நிலையில், அவற்றுக்கு விடைகாணும் வகையில் ஐநா உலக வானிலை நிறுவனம் 16 பேர் கொண்ட நிபுணர் குழுவை அமைத்தது. கொரோனா பரவலில் வானிலை மற்றும் காற்றுத் தரத்தின் தாக்கம் இருக்கிறதா என ஆராய்ந்த அக்குழு, கொரோனா தொற்று ஒரு பருவகால அச்சுறுத்தலாக உருவெடுப்பதற்கான சில அறிகுறிகளைக் கண்டுபிடித்துள்ளது.
கிருமித்தொற்றால் ஏற்படும் சுவாசப் பிரச்சினைகள் பெரும்பாலும் ஒரு குறிப்பிட்ட பருவத்திலேயே ஏற்படுவதை அக்குழு சுட்டிக்காட்டியது. "கொரோனா தொற்று இன்னும் பல ஆண்டுகளுக்கு நீடித்தால் அது ஒரு பருவகால நோயாக உருவெடுக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது," என்று ஓர் அறிக்கை வாயிலாக அக்குழு தெரிவித்துள்ளது.
ஆகையால், வானிலை மற்றும் காலநிலையை மட்டும் அடிப்படையாகக் கொண்டு கொவிட்-19 கட்டுப்பாடுகளைத் தளர்த்தக்கூடாது என்று அக்குழுவின் இணைத் தலைவர் பென் ஸைட்சிக் வலியுறுத்தியுள்ளார்.
கொரோனா தொற்றின் முதல் ஆண்டில், சில இடங்களில் வெப்பமான காலத்திலும் அது பரவியதை திரு பென் சுட்டினார். அதனால், இவ்வாண்டிலும் அவ்வாறு நிகழாது என்று கூறுவதற்கில்லை என்றும் அவர் சொன்னார்.
வெளிப்புறத் தட்பவெப்ப நிலையிலும் காற்றுத் தரத்திலும் கவனம் செலுத்திய நிபுணர்கள், குறைவான புறஊதாக் கதிரியக்கம் இருக்கும்போதும் ஈரமான, வறண்ட காலநிலைகளின்போதும் கொரோனா கிருமி நீண்டநேரம் தொற்றும் திறனைக் கொண்டிருக்கும் என்பதற்குச் சில ஆய்வகச் சோதனைகள் மூலமாகச் சான்று கிடைத்து இருப்பதாகத் தெரிவித்தனர். மோசமான காற்றுத் தரத்தால் கொரோனா மரண விகிதம் அதிகரிக்கலாம் என்பதற்கும் முதல் கட்டச் சான்றுகள் கிடைத்துள்ளன.

