இம்மாத இறுதிக்குள் 98,000க்கும் மேற்பட்ட நிறுவனங்களுக்கு வழங்கப்படும்
சம்பள உதவித்தொகை திட்டத்தின்கீழ் இம்மாத இறுதிக்குள் 98,000க்கும் மேற்பட்ட நிறுவனங்களுக்கு மொத்தம் $940 மில்லியன் உதவித்தொகை வழங்கப்பட உள்ளது. இதனுடன் சேர்த்து, கொவிட்-19 நோய்ப் பரவல் காலகட்டத்தில் சம்பள உதவித்தொகையாக $2 பில்லியனுக்கு மேல் வழங்கப்பட்டுள்ளது.
கொரோனா பரவலைச் சமாளிக்கவும் பொருளியலை, நிறுவனங்களை உருமாற்றவும் அரசாங்கம் எல்லா முயற்சிகளையும் எடுத்து வரும் நிலையில், ஊழியர்கள் மேம்பாடு அதன் மையமாகத் திகழ்கிறது என்று துணைப் பிரதமர் ஹெங் சுவீ கியட் தமது ஃபேஸ்புக் பக்கம் வழியாக நேற்று தெரிவித்தார்.
"சிங்கப்பூர் ஊழியர்களுக்குச் சம்பள உயர்வு வழங்க நிறுவனங்களுக்கு ஆதரவளிப்பதன்மூலம் நமது ஊழியர்களைக் கைதூக்கிவிடும் வழிகளில் ஒன்றாக சம்பள உதவித்தொகைத் திட்டம் திகழ்கிறது," என்று திரு ஹெங் குறிப்பிட்டுள்ளார்.
ஊழியர்களின் சம்பள உயர்விற்கான இணைநிதியை சம்பள உதவித்தொகைத் திட்டம் அளிக்கிறது. கடந்த 2013ஆம் ஆண்டில் மூன்றாண்டு திட்டமாக அறிமுகப்படுத்தப்பட்ட இத்திட்டம், பின்னர் 2020 வரை நீட்டிக்கப்பட்டது. இவ்வாண்டிற்கான வரவுசெலவுத் திட்ட அறிக்கை தாக்கலின்போது, அது மேலும் ஓராண்டிற்கு நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
2019ஆம் ஆண்டில் 20 விழுக்காடும் 2020ல் 15 விழுக்காடும் இணைநிதி வழங்கப்பட்டது. அத்துடன், சம்பள உதவித்தொகைக்கு அதிகமான ஊழியர்கள் தகுதிபெறும் வகையில் மாத ஊதிய உச்ச வரம்பும் 4,000 வெள்ளியில் இருந்து 5,000 வெள்ளியாக உயர்த்தப்பட்டது.
2019ஆம் ஆண்டில் வழங்கப்பட்ட சம்பள உயர்விற்காக 2020ஆம் ஆண்டில் 95,000க்கும் மேற்பட்ட நிறுவனங்களுக்குச் சம்பள உதவித்தொகையாக $1 பில்லியனுக்கும் அதிகமான தொகை வழங்கப்பட்டது.
அவ்வாண்டு மார்ச்சில் வழங்கப்பட்ட வருடாந்திர வழங்குதொகையுடன் ஜூன் மாதத்தில் கூடுதல் வழங்குதொகையும் தரப்பட்டது.
இந்நிலையில், மாதம் $5,000 வரை சம்பளம் பெறும் 800,000க்கும் மேற்பட்ட உள்ளூர் ஊழியர்களுக்கு, 2017 முதல் 2020 வரை அளிக்கப்பட்ட ஊதிய உயர்வில் 15 விழுக்காட்டை அரசாங்கம் இணைநிதியாக வழங்கும் என்று நிதியமைச்சும் உள்நாட்டு வருவாய் ஆணையமும் ஒரு கூட்டறிக்கை வாயிலாக நேற்று தெரிவித்தன.
இதன்மூலம் 98,000க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பலன்பெறும் என்றும் அந்த அறிக்கை கூறியது.
"கிருமிப் பரவலால் ஏற்பட்டு உள்ள நெருக்கடிகளைச் சமாளிக்க வேண்டிய நிலையிலும் ஊழியர்களைக் கைதூக்கிவிடுவதில் பல நிறுவனங்களும் தொடர்ந்து தங்கள் பங்கை ஆற்றி வருவது நெகிழ்ச்சி அளிப்பதாக உள்ளது," என்று நிதியமைச்சரும் பொருளியல் கொள்கைகளுக்கான ஒருங்கிணைப்பு அமைச்சருமான திரு ஹெங் தமது பதிவில் குறிப்பிட்டு இருக்கிறார்.
"வேலைகளை மறுவடிவமைக்கவும் ஊழியர்களின் திறன்களை மேம்படுத்திக்கொள்ளவும் ஏதுவாக, சம்பள உதவித்தொகை திட்டத்தையும் மற்ற திட்டங்களையும் நிறுவனங்கள் தொடர்ந்து பயன்படுத்திக்கொள்ள ஊக்குவிக்கிறேன்," என்று துணைப் பிரதமர் கூறியுள்ளார்.
சம்பள உதவித்தொகை திட்டத்தின்மூலம் வழங்குதொகை பெற நிறுவனங்கள் விண்ணப்பிக்கத் தேவையில்லை. தகுதிபெறும் நிறுவனங்களுக்கு தங்களுக்கான வழங்குதொகை எவ்வளவு என்பது இம்மாதம் 31ஆம் தேதிக்குள் கடிதம் மூலம் தெரிவிக்கப்படும்.
வழங்குதொகை குறித்த கோரிக்கைகள் இவ்வாண்டு ஜூன் 30ஆம் தேதிக்குள் உள்நாட்டு வருவாய் ஆணையத்திடம் தாக்கல் செய்யப்பட வேண்டும்.
கூடுதல் விவரங்களை ஆணையத்தின் இணையத்தளத்தில் காணலாம். 1800-352-4727 எனும் நேரடி அழைப்பு எண் மூலமாகவும் அல்லது wcs@iras.gov.sg எனும் மின்னஞ்சல் முகவரி மூலமாகவும் ஆணையத்தைத் தொடர்புகொள்ளலாம்.

