'கொவிட்-19 ஒரு பருவகால நோயாக மாற வாய்ப்பு'

'கொவிட்-19 ஒரு பருவகால நோயாக மாற வாய்ப்பு'

2 mins read

ஐக்கிய நாட்டு நிறுவனம் எச்சரிக்கை

கொவிட்-19 தொற்று ஒரு பரு­வ­கால நோயாக மாற வாய்ப்­புள்ளது போல் தோன்­று­கிறது என ஐக்­கிய நாட்டு நிறு­வ­னம் தெரி­வித்­துள்­ளது. அத­னால், வானி­லைக் கார­ணி­களின் அடிப்­ப­டை­யில் கொரோனா கட்­டுப்­பா­டு­க­ளைத் தளர்த்த வேண்­டாம் என அந்த அமைப்பு எச்­ச­ரித்­துள்­ளது.

கடந்த 2019ஆம் ஆண்டு இறுதி­யில் சீனா­வில் முதன்­மு­த­லாகத் தலை­காட்­டத் தொடங்­கிய கொரோனா கிரு­மி­யால் உல­கில் இது­வரை கிட்­டத்­தட்ட 2.7 மில்­லி­யன் பேர் மாண்­டு­விட்­ட­னர்.

கொரோனா தொற்று தொடர்­பான இன்­னும் பல மர்­மங்­கள் நீடிக்­கும் நிலை­யில், அவற்­றுக்கு விடை­கா­ணும் வகை­யில் ஐநா உலக வானிலை நிறு­வ­னம் 16 பேர் கொண்ட நிபு­ணர் குழுவை அமைத்­தது.

கொரோனா பர­வ­லில் வானிலை மற்­றும் காற்­றுத் தரத்­தின் தாக்­கம் இருக்­கி­றதா என ஆராய்ந்த அக்­குழு, கொரோனா தொற்று ஒரு பரு­வ­கால அச்­சு­றுத்­த­லாக உரு­வெடுப்­ப­தற்­கான சில அறி­கு­றி­களைக் கண்­டு­பி­டித்­துள்­ளது.

கிரு­மித்­தொற்­றால் ஏற்­படும் சுவா­சப் பிரச்­சி­னை­கள் பெரும்­பாலும் ஒரு குறிப்­பிட்ட பரு­வத்­திலேயே ஏற்­ப­டு­வதை அக்­குழு சுட்­டிக்­காட்­டி­யது.

"கொரோனா தொற்று இன்­னும் பல ஆண்­டு­க­ளுக்கு நீடித்­தால் அது ஒரு பரு­வ­கால நோயாக உரு­வெ­டுக்­கக்­கூ­டும் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது," என்று ஓர் அறிக்கை வாயி­லாக அக்­குழு தெரி­வித்­துள்­ளது.

ஆகை­யால், வானிலை மற்­றும் கால­நி­லையை மட்­டும் அடிப்­ப­டை­யா­கக் கொண்டு கொவிட்-19 கட்­டுப்­பா­டு­களைத் தளர்த்­தக்­கூடாது என்று அக்­கு­ழு­வின் இணைத் தலை­வர் பென் ஸைட்­சிக் வலி­யு­றுத்­தி­யுள்­ளார்.

கொரோனா தொற்­றின் முதல் ஆண்­டில், சில இடங்­களில் வெப்­ப­மான காலத்­தி­லும் அது பர­வி­யதை திரு பென் சுட்­டி­னார். அத­னால், இவ்­வாண்­டி­லும் அவ்­வாறு நிக­ழாது என்று கூறு­வ­தற்­கில்லை என்­றும் அவர் சொன்­னார்.

வெளிப்­பு­றத் தட்­பவெப்ப நிலை­யி­லும் காற்­றுத் தரத்­தி­லும் கவ­னம் செலுத்­திய நிபு­ணர்­கள், குறை­வான புற­ஊ­தாக் கதி­ரி­யக்­கம் இருக்­கும்­போ­தும் ஈர­மான, வறண்ட கால­நிலை­க­ளின்­போ­தும் கொரோனா கிருமி நீண்­ட­நே­ரம் தொற்­றும் திற­னைக் கொண்­டி­ருக்­கும் என்­ப­தற்குச் சில ஆய்­வ­கச் சோத­னை­கள் மூல­மா­கச் சான்று கிடைத்­து இ­ருப்­ப­தா­கத் தெரி­வித்­த­னர்.

மோச­மான காற்­றுத் தரத்­தால் கொரோனா மரண விகி­தம் அதி­கரிக்­க­லாம் என்பதற்கும் முதல் கட்டச் சான்றுகள் கிடைத்துள்ளன.