சிங்கப்பூரில் கொவிட்-19 தடுப்பூசி போட்டுக்கொண்ட மலேசிய சரக்கு வாகன ஓட்டுநர்களுக்கு அதற்கான சான்றிதழ் வழங்கப்படும் என்றும் இரண்டாவது ஊசி போட்டுக்கொண்ட 14 நாள்களுக்குப் பிறகு அவர்கள் அன்றாடம் வருகை புரியும் நேரத்தில் செய்யப்படும் கொவிட்-19 பரிசோதனையில் இருந்து விலக்கு அளிக்கப்படும் என்றும் வர்த்தக, தொழில் அமைச்சு தெரிவித்துள்ளது.
அவர்களுடன் வரும் மற்ற ஊழியர்களுக்கும் இது பொருந்தும்.
தடுப்பூசி நடைமுறையைப் பூர்த்தி செய்தமைக்கான குறுஞ்செய்தி அவர்களுக்கு அனுப்பப்படும்; தடுப்பூசிச் சான்றிதழும் வழங்கப்படும்.
"ஆயினும், அவ்வப்போது சிங்கப்பூரின் நில சோதனைச்சாவடிகளில் அவர்கள் பரிசோதனைக்கு உட்படுத்தப்படலாம்," என்று அமைச்சு கூறியுள்ளது.
மலேசியாவில் இருந்து வாடிக்கையாக சிங்கப்பூருக்கு வரும் குறிப்பிட்ட சில சரக்கு வாகன ஓட்டுநர்களுக்கும் அவர்களுடன் வருவோருக்கும் கொவிட்-19 தடுப்பூசி போடப்படும் என்று சுகாதார அமைச்சு இம்மாதம் 8ஆம் தேதி அறிவித்திருந்தது.
அதன்மூலம் அத்தியாவசியப் பொருள்களைக் கொண்டு வரும் ஊழியர்கள் மூலம் கொரோனா தொற்றுவது குறையும் எனக் கூறப்பட்டது.
சிங்கப்பூருக்கு எத்தனை முறை வந்து செல்கின்றனர் என்பதன் அடிப்படையில் மலேசிய சரக்கு வாகன ஓட்டுநர்களும் உடன் வருவோரும் தடுப்பூசி போடத் தேர்வு செய்யப்படுவர் என்று அமைச்சு தெரிவித்து இருக்கிறது.
சிங்கப்பூரில் தடுப்பூசி போடாத மலேசிய சரக்கு வாகன ஓட்டுநர்களும் இங்கு வரலாம் என்றபோதும் அவர்கள் எல்லைச் சுகாதார நடவடிக்கைகளுக்கு உட்பட வேண்டும் என்று அமைச்சு கூறியுள்ளது.
தடுப்பூசி போட்டுக்கொண்டாலும் போட்டுக்கொள்ளாவிடினும், இங்கு பணியாற்றும்போது அனைவரும் சேஃப்என்ட்ரி, உடல்வெப்பநிலைச் சோதனை, எல்லா நேரங்களிலும் பாதுகாப்பு இடைவெளியைக் கடைப்பிடித்தல் போன்ற பாதுகாப்பு நிர்வாக நடவடிக்கைகளைப் பின்பற்ற வேண்டும்.

