ஈஸ்வரன்: கொவிட்-19 நெருக்கடியிலிருந்து சிங்கப்பூர் மீண்டெழ உதவும்
மக்களின் தேவைகளில் கவனம் செலுத்தும் தீர்வுகளை வடிவமைப்பதன் மூலம் கொவிட்-19 நோய்ப் பரவல் சூழலில் இருந்து சிங்கப்பூர் மீண்டெழுந்து தனக்குச் சாதகமான நிலையை ஏற்படுத்திக்கொள்ள முடியும் என்று தொடர்பு, தகவல் அமைச்சர் எஸ்.ஈஸ்வரன் தெரிவித்துள்ளார்.
'டிசைன் திங்கிங்' என்று அழைக்கப்படும் இந்தச் செயல்முறை, "நிலையின்மையைப் புதிய சாத்தியக்கூறுகளாக மாற்ற முடியும்" என்றார் அவர். மக்களின் விருப்பங்களை இது நிறைவேற்று வதுடன் அனைவரையும் உள்ளடக்கிய, முற்போக்கான சமுதாயத்தை நாம் நோக்கிச்செல்ல இது உதவுவதாக அவர் சொன்னார்.
ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளிதழுடன் பங்காளித்துவ முயற்சியாக சிங்கப்பூர் தொழில்நுட்ப, வடிவமைப்பு பல்கலைக்கழகம் நேற்று ஏற்பாடு செய்த மெய்நிகர் 'வடிவமைப்பு புத்தாக்கக் கருத்தரங்கு' ஒன்றில் கலந்துகொண்ட பேசியபோது அமைச்சர் ஈஸ்வரன் இந்தக் கருத்தை முன்வைத்தார்.
சிக்கலான சவால்களை அரசாங்கத்தால் மட்டும் சமாளிக்க முடியாது என்பதால் சமுதாயத்தில் வெவ்வேறான விருப்பங்கள், கட்டமைப்புகள், ஆற்றல்கள் உடைய மக்களுடன் சேர்ந்து அரசாங்கம் பணியாற்ற வேண்டியிருப்பதாக அவர் விவரித்தார்.
இதில், உயர்கல்வி நிலையங்களுடன் பொதுத் துறை கொண்டிருக்கும் நீண்டகாலப் பங்காளித்துவ உறவுமுறையும் அடங்கும். படைப்பாற்றல், விமர்சன சிந்தனை, துறைகளுக்கு இடையே பிரச்சினைகளைத் தீர்க்கும் ஆற்றல் ஆகியவற்றைப் பேணி வளர்ப்பதில் உயர்கல்வி நிலையங்கள் முக்கிய பங்கு வகிப்பதாக திரு ஈஸ்வரன் கூறினார்.
மக்களுடன் சேர்ந்து தீர்வுகளை ஏற்படுத்த அரசாங்கம் விரும்புகிறது. எடுத்துக்காட்டாக, கடந்த மாதம் தொடங்கப்பட்ட 'டிஜிட்டல் ஃபார் லைஃப்' எனும் இயக்கம், சிங்கப்பூரர்கள் மின்னிலக்கத் திறன்களை வளர்க்க உதவும் வளங்களை வழங்குகிறது.
கொவிட்-19 சூழல் மின்னிலக்கமயத்தைத் துரிதப்படுத்தியுள்ளது. இதனால் புதிய வழிமுறைகள் மூலம் வர்த்தகம் புரிய நிறுவனங்கள் தங்களைத் தயார்ப்படுத்திக்கொள்வதுடன் வாடிக்கையாளர்களின் அதிகரித்து வரும் எதிர்பார்ப்புகளை அவை பூர்த்திசெய்ய வேண்டும் என்றார் அவர்.
தகவல் தொடர்புத் தொழில்நுட்ப வசதிகளை மக்கள் பயன்படுத்துவதை உதவ தொடர்பு, தகவல் அமைச்சின் பணிகள் குறித்தும் அமைச்சர் தமது உரையில் குறிப்பிட்டுப் பேசினார்.
எடுத்துக்காட்டாக, மூத்தோருக்கு மின்னிலக்க வசதிகளைப் பயன்படுத்த கற்றுக்கொடுக்க மின்னிலக்கத் தூதர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

