கிட்டத்தட்ட 40,000 பேருக்குத் தொற்று
இந்தியாவில் கடந்த 10 மாதங்களில் இல்லாத அளவிற்கு கடந்த ஐந்து நாட்களில் கொவிட்-19 நோய்த்தொற்று பாதிப்பு கணிசமாக அதிகரித்துள்ளது. இந்தியாவில் கொவிட்-19 பாதிப்பு கடந்த ஆண்டு நவம்பர் 28ஆம் தேதிக்குப் பிறகு நேற்று காலை வரையிலான 24 மணி நேரத்தில் 39,726 பேருக்குத் தொற்று உறுதியானது.
மகாராஷ்டிர மாநிலத்தில் மட்டும் இதுவரை இல்லாத அளவாக புதிதாக 25,833 பேருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டது. இந்தியாவில் நேற்று அறிவிக்கப்பட்ட தொற்று எண்ணிக்கையில் அந்த மாநிலம் 65 விழுக்காடு பங்களிக்கிறது.
இந்நிலையில், மகாராஷ்டிராவில் மக்களுக்குத் தடுப்பூசி போடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளதாகத் தெரிவித்த அம்மாநில சுகாதார அமைச்சர் ராஜேஷ் டோப், மத்திய அரசிடமிருந்து வாரத்திற்கு இரண்டு மில்லியன் தடுப்பூசி மருந்துகளைத் தாம் கோரியுள்ளதாகச் சொன்னார்.
தலைநகர் புதுடெல்லியிலும் கொவிட்-19 பாதிப்பு கடந்த ஆண்டு டிசம்பர் 30க்கு பிறகு 607 ஆக அதிகரித்துள்ளது. அங்கு கடந்த இரு வாரங்களாக தொற்று ஏறுமுகம் கண்டு வருகிறது.
கடந்த செப்டம்பருக்குப் பிறகு பஞ்சாப் மாநிலத்தில் ஆக அதிகமாக 2,387 பேரும் சத்தீஸ்கரில் 211 பேரும் கொவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தென்னிந்திய மாநிலங்களைப் பார்க்கையில், கர்நாடகாவில் கடந்த நவம்பர் 28க்கு பிறகு ஆக அதிகமாக 1,488 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் 989 பேருக்கும் புதுச்சேரியில் கடந்த நவம்பருக்கு பிறகு 81 பேருக்கும் தொற்று உறுதியானது.
நாடளவில் தடுப்பூசித் திட்டத்தைத் தீவிரப்படுத்துமாறு மாநில முதல்வர்களிடம் இந்திய பிரதமர் நரேந்திர மோடி இந்த வாரம் வலியுறுத்தியிருந்தார்.
தமிழகத்தில் கிருமித்தொற்று நிலவரம் - பக்கம் 5ல்

