அமெரிக்க அதிபராக திரு ஜோ பைடன் பதவியேற்றதைத் தொடர்ந்து அமெரிக்கா, சீனா ஆகிய நாடுகளைச் சேர்ந்த மூத்த அதிகாரிகள் முதன்முறையாக சந்தித்தனர். அவர்கள் நடத்திய பேச்சுவார்த்தை அவ்விரு நாடுகளுக்கும் கசப்பாக முடிந்தது.
அமெரிக்காவின் அலாஸ்கா மாநிலத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற இந்தச் சந்திப்பில் அமெரிக்க தரப்பில் பேசிய வெளியுறவு அமைச்சர் ஆன்டனி பிளிங்கன், ஹாங்காங், தைவான், சீனாவின் ஸின்ஜியாங் வட்டாரம் மீதான சீனாவின் கொள்கைகள் குறித்து அமெரிக்கா தனது "ஆழ்ந்த கவலையை" வெளிப்படுத்துவதாகக் கூறினார்.
அமெரிக்கா மீது சீனாவின் இணையத் தாக்குதல்களைச் சுட்டிய அவர், அனைத்துலக நிலைத்தன்மையைக் கட்டிக்காக்கும் விதிமுறைகளை அடிப்படையாகக் கொண்ட ஒழுங்குமுறைக்கு சீனாவின் இத்தகைய நடவடிக்கைகள் மிரட்டல் விடுப்பதாக குறைகூறினார். இச்சந்திப்பில் கலந்துகொண்டு பேசிய அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகரான திரு ஜேக் சல்லிவன், "நாங்கள் சச்சரவை விரும்பவில்லை. ஆனால், கடுமையான, உத்திபூர்வ போட்டியை வரவேற்கிறோம். எங்களது கோட்பாடுகள், எங்களது மக்கள், எங்களது நட்பு நாடுகளை ஆதரித்து நாங்கள் எப்போதும் குரல் கொடுப்போம்," என்று சொன்னார்.
சீனாவைப் பிரதிநிதித்து இந்தச் சந்திப்பில் வெளியுறவு அமைச்சர் வாங் யி, உயர் அரசதந்திரி யாங் ஜியேச்சி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். அமெரிக்காவின் இந்தக் கூற்றுக்குப் பதிலடி தரும் விதமாக நீண்டநேரம் பேசிய திரு யாங், அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் அவற்றுக்கேற்ற சொந்த ஜனநாயக ஆட்சிமுறை நடப்பில் இருப்பதாகவும் தனது உள்நாட்டு விவகாரங்களில் வாஷிங்டன் தலையிடுவதை பெய்ஜிங் கடுமையாக எதிர்ப்பதாகவும் கூறினார்.
சீனாவை மட்டம் தட்டி பேசுவதற்கு அமெரிக்காவுக்குத் தகுதி இல்லை என்றும் பரஸ்பர மரியாதையுடனான அடிப்படையில் மட்டுமே சீனாவுடன் பேச வேண்டும் என்றும் திரு யாங் சொன்னதாக சீன அரசாங்க ஒலிபரப்பு நிறுவனமான சிசிடிவி கூறியது.
"சீனாவுக்கு எதிராக கடுமையான உத்திமுறை பயன்படுத்தப்பட்டால் இறுதியில் அவ்வாறு நடந்துகொள்ளும் நாட்டிற்குத்தான் பாதிப்பு ஏற்படும் என்பதை வரலாறு நிரூபிக்கும்," என்றும் திரு யாங் சொன்னதாக சிசிடிவி கூறியது.
அமெரிக்கா தனது விவகாரங்களைக் கவனித்துக்கொள்ள வேண்டும் என்றும் சீனா அதன் விவகாரங்களைக் கவனித்துக்கொள்ள அமெரிக்கா விட்டுவிட வேண்டும் என்றும் திரு யாங் கூறினார்.

