அமெரிக்கா-சீனா முதல் சந்திப்பிலேயே முரண்பாடு

2 mins read
4e680f67-c75a-4b69-bbab-46ffc3889aa5
அமெரிக்காவின் அலாஸ்கா மாநிலத்தில் நேற்று முன்தினம் அமெரிக்க-சீன மூத்த தலைவர்கள் கலந்துகொண்ட இந்தச் சந்திப்பின்போது அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆன்டனி பிளிங்கன் (வலக்கோடியில்) பேசினார். படம்: ஏஎஃப்பி -

அமெ­ரிக்க அதி­ப­ராக திரு ஜோ பைடன் பத­வி­யேற்­ற­தைத் தொடர்ந்து அமெ­ரிக்கா, சீனா ஆகிய நாடு­க­ளைச் சேர்ந்த மூத்த அதி­கா­ரி­கள் முதன்­மு­றை­யாக சந்தித்தனர். அவர்­கள் நடத்­திய பேச்சு­வார்த்தை அவ்­விரு நாடு­களுக்­கும் கசப்­பாக முடிந்­தது.

அமெ­ரிக்­கா­வின் அலாஸ்கா மாநி­லத்­தில் நேற்று முன்­தி­னம் நடை­பெற்ற இந்­தச் சந்­திப்­பில் அமெ­ரிக்க தரப்­பில் பேசிய வெளி­யு­றவு அமைச்­சர் ஆன்­டனி பிளிங்­கன், ஹாங்­காங், தைவான், சீனா­வின் ஸின்­ஜி­யாங் வட்­டா­ரம் மீதான சீனா­வின் கொள்­கை­கள் குறித்து அமெ­ரிக்கா தனது "ஆழ்ந்த கவ­லையை" வெளிப்­ப­டுத்­து­வ­தா­கக் கூறி­னார்.

அமெ­ரிக்கா மீது சீனா­வின் இணை­யத் தாக்­கு­தல்­க­ளைச் சுட்­டிய அவர், அனைத்­து­லக நிலைத்­தன்­மை­யைக் கட்­டிக்­காக்­கும் விதி­மு­றை­களை அடிப்­ப­டை­யா­கக் கொண்ட ஒழுங்­கு­மு­றைக்கு சீனா­வின் இத்­த­கைய நட­வ­டிக்­கை­கள் மிரட்­டல் விடுப்­ப­தாக குறை­கூ­றி­னார். இச்­சந்­திப்­பில் கலந்­து­கொண்டு பேசிய அமெ­ரிக்க தேசிய பாது­காப்பு ஆலோ­ச­க­ரான திரு ஜேக் சல்­லி­வன், "நாங்­கள் சச்­ச­ரவை விரும்­ப­வில்லை. ஆனால், கடு­மை­யான, உத்­தி­பூர்வ போட்­டியை வர­வேற்­கி­றோம். எங்­க­ளது கோட்­பாடு­கள், எங்­க­ளது மக்­கள், எங்­க­ளது நட்பு நாடு­களை ஆத­ரித்து நாங்­கள் எப்­போ­தும் குரல் கொடுப்போம்," என்று சொன்­னார்.

சீனா­வைப் பிர­தி­நி­தித்து இந்­தச் சந்­திப்­பில் வெளி­யு­றவு அமைச்­சர் வாங் யி, உயர் அர­ச­தந்­திரி யாங் ஜியேச்சி உள்­ளிட்­டோர் கலந்­து­கொண்­ட­னர். அமெ­ரிக்­கா­வின் இந்­தக் கூற்­றுக்­குப் பதி­லடி தரும் வித­மாக நீண்­ட­நே­ரம் பேசிய திரு யாங், அமெ­ரிக்­கா­வுக்­கும் சீனா­வுக்­கும் அவற்­றுக்­கேற்ற சொந்த ஜன­நா­யக ஆட்­சி­முறை நடப்­பில் இருப்­பதா­க­வும் தனது உள்­நாட்டு விவ­கா­ரங்­களில் வாஷிங்­டன் தலை­யிடு­வதை பெய்­ஜிங் கடு­மை­யாக எதிர்ப்­ப­தா­க­வும் கூறி­னார்.

சீனாவை மட்­டம் தட்டி பேசு­வதற்கு அமெ­ரிக்­கா­வுக்­குத் தகுதி இல்லை என்­றும் பரஸ்­பர மரி­யா­தை­யு­ட­னான அடிப்­ப­டை­யில் மட்டுமே சீனா­வு­டன் பேச வேண்­டும் என்றும் திரு யாங் சொன்­ன­தாக சீன அர­சாங்க ஒலி­ப­ரப்பு நிறு­வ­ன­மான சிசி­டிவி கூறி­யது.

"சீனா­வுக்கு எதி­ராக கடு­மை­யான உத்­தி­முறை பயன்­படுத்­தப்­பட்­டால் இறு­தி­யில் அவ்வாறு நடந்துகொள்ளும் நாட்­டிற்­குத்­தான் பாதிப்பு ஏற்­படும் என்­பதை வர­லாறு நிரூ­பிக்­கும்," என்­றும் திரு யாங் சொன்­ன­தாக சிசி­டிவி கூறி­யது.

அமெ­ரிக்கா தனது விவ­கா­ரங்­களைக் கவ­னித்­துக்­கொள்ள வேண்­டும் என்­றும் சீனா அதன் விவ­காரங்­க­ளைக் கவ­னித்­துக்­கொள்ள அமெ­ரிக்கா விட்­டு­விட வேண்­டும் என்­றும் திரு யாங் கூறி­னார்.