மியன்மாரில் மக்களை நசுக்கும் ராணுவ ஆட்சிக்கு எதிராக அனைத்துலக நெருக்குதல் வலுத்து வருகிறது. மேற்கத்திய நாடுகளுடன் அண்டைய ஆசிய நாடுகளும் ஒன்றுசேர்ந்து ராணுவத்தின் அடக்குமுறையைக் கண்டித்து வருகின்றன. ஆயுதமின்றி போராடும் மக்களை சுட்டுப் பொசுக்க வேண்டாம் என அவை ஒருமித்த குரலில் எச்சரித்தன.
ராணுவத்தின் தொடர் அடக்கு முறையைக் கண்டிப்பதாக ஐநா தலைமைச் செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் தெரிவித்தார். மியன்மாருக்கு எதிராக உறுதியான, ஒன்றிணைந்த அனைத்துலக நடவடிக்கை அவசரமாகத் தேவைப்படுவதாக திரு குட்டரெஸ் கூறியதாக அவரது பேச்சாளர் தெரிவித்தார்.
ஐநா செய்தியாளர் டாம் ஆண்ட்ரூஸும் மியன்மாருக்கு எதிராக பொருளியல் தடைகளை உடனடி யாக அமல்படுத்த வேண்டும் என டுவிட்டர் வாயிலாகக் கோரிக்கை விடுத்துள்ளார்.
பிப்ரவரி 1ஆம் தேதி முதல் ராணுவ ஆட்சிக்கு எதிராகக் கொதித்து எழுந்து போராடும் மக்கள் கொல்லப்பட்டு வருகின்றனர். நேற்று இருவர் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதுவரை 238 பேரின் உயிரை ராணுவம் பறித்துவிட்டதாகக் கூறும் அரசியல் கைதி
களுக்கான உதவிச் சங்கம், உண்மையான பலி எண்ணிக்கை இதைவிட பன்மடங்கு அதிகமாக இருக்கக்கூடும் என்றது.
ரப்பர் தோட்டாக்களைப் பயன்
படுத்தி மக்களைப் பயமுறுத்து
வதற்குப் பதில் உண்மையான தோட்டாக்களைப் பயன்படுத்தி மக்களின் உயிரை ராணுவம் பறித்து வருகிறது. ஆனாலும், ஜனநாயகத்தை நிலைநாட்டும் வரை போராட்டத்தைக் கைவிடப்போவதில்லை என ஆர்ப்பாட்டக்காரர்கள் முழங்கி வருகின்றனர்.
இரண்டாவது பெரிய நகரான மண்டலேயில் நேற்று ஆர்ப்பாட்டக் கும்பலுக்குள் வாகனம் ஒன்று திடீரென புகுந்ததில் பலரும் காயமுற்றதாக உள்ளூர் இணையச் செய்தி ஒன்று குறிப்பிட்டது. ஏன் அவ்வாறு வாகனம் செலுத்தி மக்களின் உயிரைப் பறிக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டது என தெளிவாகத் தெரியவில்லை என்றது அச்செய்தி. மியன்மார் முழுவதும் உள்ள சிறுநகர்களிலும் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதற்கிடையே, ஆகப்பெரிய நகரான யங்கூனில் தற்காலிகமாக ஏற்படுத்தப்பட்ட தடுப்புகளைஅகற்றுமாறு பொதுமக்களை துப்பாக்கிமுனையில் ராணுவம் மிரட்டி வருவதாக ஏஎஃப்பி செய்தி குறிப்பிட்டது. ராணுவத்தின் தாக்கு
தலிலிருந்து காத்துக்கொள்ள ஆர்ப்பாட்டக்காரர்கள் தங்கள் கையில் கிடைத்த பொருட்களைக் கொண்டு வீதிகளில் தடுப்புகளை அமைத்துள்ளனர்.
ஆனால் அவற்றை எல்லாம் ஆர்ப்பாட்டக்காரர்களே அகற்ற வேண்டும் என நேற்று யங்கூன் முழுவதும் சுற்றுக்காவல் நடத்திய ராணுவத்தினர் மக்களை அச்சுறுத்தும் வகையில் துப்பாக்கியை நீட்டினர்.

