$93 மில்லியன் மின்னிலக்கப் படைப்பை வாங்கிய விக்னேஷ் வீடு, கார் இல்லாத சிங்கப்பூர் தொழில்முனைவர்

$93 மில்லியன் மின்னிலக்கப் படைப்பை வாங்கிய விக்னேஷ் வீடு, கார் இல்லாத சிங்கப்பூர் தொழில்முனைவர்

2 mins read
e863a39c-271a-4c63-a540-7fd989535c1f
-

சிங்கப்பூரில் வசிக்கும் தொழில் முனைவரான விக்னேஷ் சுந்தரேசன் (படம்) தற்போது செய்திகளில் இடம்பிடித்து வருகிறார். அண்மையில் 'எவ்ரிடேய்ஸ்: த ஃபர்ஸ்ட் 5,000 டேய்ஸ்' என்னும் அரிய கலைப்படைப்பை $69 மில்லியன் (S$93 மில்லியன்) மின்னிலக்க நாணயத்தைப் பயன்படுத்தி வாங்கியது முதல் அவர் அதிகம் பேசப்பட்டு வருகிறார்.

'பீபல்' என்று அழைக்கப்படும் மைக் விங்கிள்மன் என்னும் கலைஞரால் உருவாக்கப்பட்ட மெருகுத்தளம் போன்றதொரு மெய்நிகர் புகைப்படத்தொகுப்பு மார்ச் 11ஆம் தேதி நடைபெற்ற கிறிஸ்டீ'ஸ் ஏலத்தில் வைக்கப்பட்டிருந்தது. அதனை மெட்டாகோவன் என்பவர் ஏலத்தில் எடுத்ததாகத் தகவல் பரவியது. ஆனால் அது புனைபெயர் என்பதும் விக்னேஷ் சுந்தரேசன்தான் மெட்டாகோவன் என்பதும் கடந்த வியாழக்கிழமை தெரிய வந்தது. 'சப்ஸ்டேக்' இணையத்தளத்தில் அவரே தமது அடையாளத்தை வெளிப்படுத்தினார்.

தமிழ்நாட்டைச் சேர்ந்த திரு விக்னேஷ், 32, தமது பெயரில் வீடோ காரோ இல்லை என்றும் தாம் ஒரு சாதாரண ஆள் என்றும் 'ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்' செய்தித்தாளிடம் தெரிவித்துள்ளார். டுவிட்டரில் மெட்டாகோவனை 20,000 பேர் பின்தொடருகிறார்கள்.

லிட்டில் இந்தியா அருகில் கொண்டோமினிய வீடு ஒன்றில் தங்கி இருக்கும் அவர், 'போர்ட்கீ டெக்னாலஜிஸ்' என்னும் சிங்கப்பூரைத் தளமாகக் கொண்ட தகவல் தொழில்நுட்ப ஆலோசனை நிறுவனத்தின் தலைமை நிர்வாகி ஆவார். மூன்றாண்டுகளுக்கு முன்பு சிங்கப்பூரில் குடியேறிய இவரும் ஆனந்த் வெங்கடேஷ்வரன் என்பவரும் இணைந்து மெட்டாபர்ஸ் என்னும் உலகின் பெரிய 'என்எஃப்டி ஃபண்ட்' நிறுவனத்தை நடத்தி வருகின்றனர்.

பத்தாண்டுகளுக்கு முன்பு இந்தியாவில் 'த இந்து' நாளிதழின் தொழில்நுட்ப ஆலோசகராக திரு விக்னேஷும் பத்திரிகையாளராக திரு ஆனந்தும் பணிபுரிந்தனர். 2018க்கு முன்பு வரை தாம் கனடாவில் இருந்ததாக திரு விக்னேஷ் குறிப்பிட்டார்.

2013ஆம் ஆண்டு சென்னையில் இருந்தபோது முதன்முதலாக மின்னிலக்க நாணயத்தைச் சம்பாதிப்பதற்கான வழிகளை தாம் தேடியதை அறிந்த தமது தாயார், "உருப்படியாக ஏதாவது செய்து முன்னேறப் பார்," என்று கூறியதாகத் தெரிவித்துள்ளார்.