சிங்கப்பூரின் தொழிலாளர் சந்தை மீட்சி அடைகிறது என்றாலும் ஊழியர் சேர்ப்பில் முதலாளிகள் காத்திருந்து பார்ப்போம் என்ற அணுகுமுறையை இன்னமும் கடைப்பிடிக்கிறார்கள் என்பது தெரியவருகிறது.
மிகவும் நிச்சயமில்லாத பொருளியல் நிலவரங்களைக் கருத்தில்கொண்டு நிறுவனங்கள் எச்சரிக்கையுடன் செயல்படுகின்றன.
கொவிட்-19 பாதிப்புகள் அதிக காலத்திற்கு அதிக பாதிப்புடன் நீடித்து இருக்கும் என்பதே இதற்கான காரணம். இதோடு சில துறைகள் கொஞ்ச காலத்திற்கு மீட்சியடைய இயலாத சூழ்நிலையும் இருக்கின்றன என்று கவனிப்பாளர்கள் கூறுகிறார்கள்.
சிங்கப்பூரர்கள், நிரந்தரவாசிகள் ஆகியோருக்கான வேலை வாய்ப்புகள், கொவிட்-19க்கு முன்பு இருந்த நிலையைவிட கொஞ்சம் மேலான நிலைக்கு மீண்டு இருக்கின்றன என்பது மனிதவள அமைச்சு சென்ற வாரம் வெளியிட்ட தொழிலாளர் சந்தை புள்ளிவிவரங்கள் மூலம் தெரியவந்துஉள்ளது.
வேலை பெற்ற சிங்கப்பூர்வாசிகளின் எண்ணிக்கை, ஓராண்டுக்கு முன்பு இருந்ததைவிட 14,900 ஆகக் கூடியது. இதோடு, வேலைச் சந்தை மேம்பட்டு வருவதாக அண்மை ஆய்வு கள் மூலம் தெரியவந்துள்ளன.
இருந்தாலும் ஊழியர்களை வேலையில் சேர்க்கும் மனப்போக்கு சீராக இல்லை. பலவீனமாகவே இன்னமும் இருக்கிறது என்று கவனிப்பாளர்கள் நம்புகிறார்கள். சென்ற ஆண்டு பலருக்கும் கிடைத்த வேலைகள் தற்காலிகமானவைதான் என்றும் வேலை ஆதரவுத் திட்டம் போன்ற அரசாங்க மானியங்கள் அவற்றுக்குக் கை கொடுப்பதாகவும் அவர்கள் நம்புகிறார்கள்.
அத்தகைய தற்காலிக வேலைகளை நிரந்தரமானதாக ஆக்குவதே சவால் என்று 'டிபிஎஸ்' மூத்த பொருளியல் வல்லுநர் இர்வின் சியா கூறுகிறார்.
கொவிட்-19க்கு முன்பு இருந்த ஆட்சேர்ப்பு நிலை படிப்படியாகத்தான் திரும்பும் என்று 'மேன்பவர் குரூப் சிங்கப்பூர்' என்ற நிறுவனத்தில் நிர்வாகியாக செயலாற்றும் திருவாட்டி லிண்டா டியோ தெரிவிக்கிறார்.
இதனிடையே, பல துறைகளையும் பார்க்கையில் ஆட்சேர்ப்பு ஏற்ற இறக்கமாக இருக்கிறது என்று 'பிப்பீள் வோர்ல்டுவைட் கன்சல்டிங்' என்ற நிறுவனத்தின் நிர்வாக இயக்குநரான டேவிட் லியோங் கூறினார்.
"விமானப் போக்குவரத்து, விருந்தோம்பல் போன்ற துறைகள் கொவிட்-19 பாதிப்பை இன்னமும் கடுமையாகச் சந்தித்து வருகின்றன. இந்தத் துறைகளில் இன்னும் கொஞ்ச காலத்திற்கு ஆட்சேர்ப்பு நிலவரம் சரியில்லாமல் இருக்கும் என்றுதான் தெரிகிறது.
"அதேவேளையில், சுகாதாரப் பராமரிப்பு, தொழில்நுட்பம் போன்ற இதர துறைகள் வளர்க்கின்றன. அவற்றில் புதிய வேலைகள் உருவாகுகின்றன," என்று டாக்டர் லியோங் கூறினார்.
வேலைகளை உருவாக்கி அவற்றைத் தக்கவைத்துக்கொள்ள அரசாங்கம் அளித்து வரும் ஆதரவு இல்லை என்றால் தொழிலாளர் சந்தை சூழ்நிலை சிறப்பாக இராது என்று டாக்டர் லியோங் தெரிவித்தார்.
"சில குறிப்பிட்ட துறைகளில் ஆட்சேர்ப்பு மேம்பட்டு இருக்கிறது. என்றாலும் அது இழக்கப்பட்ட வேலைகளின் எண்ணிக்கை அளவுக்கு இருக்காது. ஆகையால் நாம் சிரமமான காலத்தில் இருந்து மீண்டுவிட்டோம் என்ற சிந்தனை வருவதற்கு இது உகந்த காலம் இல்லை," என்று டாக்டர் லியோங் மேலும் தெரிவித்தார்.
இருந்தாலும் தொழிலாளர் சந்தை ஊக்கமூட்டும் வகையில் அண்மையில் மீட்சி அடைந்து வருகிறது. தொழில்நுட்பம், சுகாதாரப் பராமரிப்புத் துறைகள் ஒருபுறம் இருக்க, நிதிச் சேவைகள், இணைய வர்த்தகம், தளவாடப் போக்குவரத்து ஆகிய துறைகளும் வளர்ந்து வருகின்றன.
பலதரப்பட்ட வேலைகளில் ஊழியர்கள் சேர்கின்றனர்.
இந்த மீட்சிக்கு மருத்துவம் மற்றும் அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், கணிதம் ஆகிய துறைகள் முன்னின்று தலைமை தாங்குகின்றன.
உற்பத்தி, கட்டுமானம், பண்டகசாலை ஆகிய துறைகளும் ஊழியர்களுக்கு வலுவான தேவை இருப்பதாகத் தெரிவிக்கின்றன.
இருந்தாலும் விருந்தோம்பல், சுற்றுலா போன்ற துறைகளில் வாய்ப்புகள் இன்னமும் குறைவாகவே இருக்கின்றன என்று 'இன்டீட்' என்ற வேலை வாய்ப்புத்தளம் மார்ச் 10ஆம் தேதி கூறியது.

