ரயில் பசுமைப் பாதையின் ஒரு பகுதி மீண்டும் கூடுதல் வசதிகளுடன் திறக்கப்பட்டுள்ளது. அங்கு செல்ல விரும்புவோருக்காக கூடுதல் நுழைவாயில்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஹில்வியூவுக்கும் புக்கிட் தீமாவுக்கும் இடைப்பட்ட அந்தப் பசுமைப் பாதை நான்கு 4 கிலோமீட்டர் நீளமுடையது. பாதுகாக்கப்பட்ட இரண்டு பழமைவாய்ந்த பாலங்களுக்கு இடையே இந்தப் பாதை அமைந்துள்ளது. மறுசீரமைப்புப் பணிகளுக்காக 2019ஆம் ஆண்டிலிருந்து அப்பாதை மூடப்பட்டிருந்தது. 'ஃபிரெண்ட்ஸ் ஆஃப் தி ரேல் காரிடோர்' அமைப்பின் உறுப்பினர்களுடன் தேசிய வளர்ச்சி அமைச்சர் டெஸ்மண்ட் லீ இன்று அப்பாதையில் நடந்தார். 'ஃபிரெண்ட்ஸ் ஆஃப் தி ரேல் காரிடோர்' அமைப்பு 2017ஆம் ஆண்டில் அமைக்கப்பட்டது. மீண்டும் திறக்கப்பட்டுள்ள ரயில் பசுமைப் பாதைக்கான திட்டம் வரையப்பட்டபோது சிங்கப்பூரர்களிடம் அதுகுறித்து கருத்து கேட்கப்பட்டதாக திரு லீ தெரிவித்தார். சிங்கப்பூரர்களின் கருத்துகளைக் கருத்தில்கொண்டு பழைய ரயில் பாதையின் சில அம்சங்கள் பாதுகாக்கப்பட்டிருப்பதாக அவர் கூறினார். அவற்றில் நான்கு பாலங்களும் அடங்கும். அவை பழுதுபார்க்கப்பட்டு புதுப்பிக்கப்பட்டுள்ளன. அதுமட்டுமல்லாது, அப்பாதையில் பசுமை அம்சங்கள் மேம்படுத்தப்பட்டுள்ளதாக திரு லீ தெரிவித்தார். சிங்கப்பூரில் மட்டுமே காணப்படும் மரங்கள் பாதை நெடுகிலும் நடப்பட்டுள்ளது. இரவு நேரத்தில் விழித்திருந்து இரை தேடும் விலங்குகளுக்கு அப்பகுதியை ஏற்புடையதாக்க இரவு நேரத்தில் கூடுமான அளவுக்கு வெளிச்சத்தின் அளவு குறைக்கப்பட்டுள்ளது. ரயில் பசுமைப் பாதைக்கு இட்டுச்செல்லும் மேலும் எட்டு நுழைவாயில்கள் அமைக்கப்பட்டுள்ளன. அப்பகுதியில் நீர் தேங்காமல் இருக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
புதிய அம்சங்களுடன் ரயில் பசுமைப் பாதையின் ஒரு பகுதி மீண்டும் திறக்கப்பட்டது
1 mins read
மீண்டும் திறக்கப்பட்டுள்ள பசுமைப் பாதையில் நடந்த தேசிய வளர்ச்சி அமைச்சர் டெஸ்மண்ட் லீ (வலமிருந்து இரண்டாவது). படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

