சிங்கப்பூரில் இன்று நண்பகல் நிலவரப்படி மேலும் 12 பேருக்கு கொரோனா கிருமித்தொற்று ஏற்பட்டுள்ளது.
இதன்மூலம் கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 60,208ஆக அதிகரித்துள்ளது.
பாதிக்கப்பட்ட 12 பேரும் வெளிநாடுகளிலிருந்து சிங்கப்பூருக்கு வந்தவர்கள்.
சிங்கப்பூர் வந்ததும் அவர்களுக்கு இல்லத்தனிமை உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக சுகாதார அமைச்சு கூறியது.
சமூக அளவில் யாரும் பாதிப்படையவில்லை. வெளிநாட்டு ஊழியர்கள் தங்கு விடுதிகளிலும் யாருக்கும் கிருமித்தொற்று ஏற்படவில்லை.
இதற்கிடையே, வெளிநாடுகளிலிருந்து சிங்கப்பூருக்கு வந்த 12 பேருக்குக் கொவிட்-19 பாதிப்பு இருப்பதாக நேற்று உறுதி செய்யப்பட்டது.
அவர்களில் நான்கு பேர் இந்தோனீசியாவிலிருந்து வந்த கப்பலில் பணிபுரியும் சிப்பந்திகள்.
அவர்கள் சிங்கப்பூருக்குள் வருவதற்கு முன்பு கப்பலிலேயே அவர்களுக்கு கொவிட்-19 மருத்துவப் பரிசோதனை நடத்தப்பட்டதாக அமைச்சு கூறியது.
சிங்கப்பூரர் ஒருவரும் சார்ந்திருப்போர் அட்டை வைத்திருப்பவர் ஒருவரும் வொர்க் பாஸ் வெளிநாட்டு ஊழியர் ஒருவரும் நீண்டகால குடியுரிமை அட்டை வைத்திருக்கும் இருவரும் வேலை அனுமதி அட்டை வைத்திருக்கும் மூவரும் பாதிக்கப்பட்டுள்ளதாக நேற்று உறுதி செய்யப்பட்டது.
பாதிக்கப்பட்ட சிங்கப்பூரர் இந்தியாவிலிருந்து திரும்பிய 23 வயது ஆடவர் ஆவார்.
சார்ந்திருப்போர் அட்டை வைத்திருப்பவர் நேப்பாளத்திலிருந்து வந்தவர்.
நீண்டகால அட்டை வைத்திருக்கும் இருவர் இந்தியாவிலிருந்து வந்தவர்கள்.
பாதிக்கப்பட்ட வொர்க் பாஸ் ஊழியர் நேப்பாளத்தைச் சேர்ந்தவர். கிருமித்தொற்று ஏற்பட்ட மூன்று வேலை அனுமதி சீட்டு ஊழியர்கள் இந்தியா, இந்தோனீசியா, பிலிப்பீன்ஸ் ஆகிய நாடுகளிலிருந்து வந்த பணிப்பெண்கள்.

