துணைப் பிரதமர் ஹெங்: அமெரிக்கா, சீனா இரண்டும் பதற்றத்தை தவிர்க்க வேண்டும்

துணைப் பிரதமர் ஹெங்: அமெரிக்கா, சீனா இரண்டும் பதற்றத்தை தவிர்க்க வேண்டும்

3 mins read
51c58f09-f009-4c5c-be7b-cc235e3fdfd4
துணைப் பிரதமர் ஹெங் சுவீ கியட். படம்: சாவ்பாவ் -

அமெரிக்காவும் சீனாவும் ஆதிக்கப் போட்டாபோட்டியில் ஈடுபட்டாலும் அவை பதற்றங்களைத் தணிக்க வழி காணவேண்டும் என்று துணைப் பிரதமர் ஹெங் சுவீ கியட் வலியுறுத்தினார்.

அதோடு, அவை இரண்டும் ஒத்துழைப்புக்கான ஏற்பாடு ஒன்றையும் உருவாக்க வேண்டும் என்று திரு ஹெங் குறிப்பிட்டார்.

'கொவிட்-19க்குப் பிந்தைய உலகில் ஆசியா இன்னும் வலுவாக தலை எடுக்குமா' என்ற தலைப்பில் 'கிரிடிட் சூயிஸ் ஆசிய முதலீட்டு' கூட்டம் நேற்று நடந்தது.

அதில் பேசிய நிதி அமைச்சருமான திரு ஹெங், அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையிலான நிலையான உறவு உலகின் பொது நலன்களுக்கு முக்கியம் என்றார்.

அமெரிக்காவுக்குப் பொறுப்பு ஏற்றுள்ள அதிபர் பைடன், இரு நாட்டு உறவில் கணிக்கத்தக்க அணுகுமுறையைக் கடைப்பிடிப்பார் என்றாலும் அமெரிக்காவும் சீனாவும் ஆதிக்கப் போட்டியாளர்களாகவே தொடர்ந்து இருந்துவருவர் என்று தெரிவித்த துணைப் பிரதமர், இருந்தாலும் தாங்கள் சேர்ந்து செயல்படுவதற்கான துறைகள் இருப்பதை அந்த இரு தரப்புகளும் ஒப்புக்கொண்டு இருப்பது மகிழ்ச்சியாக உள்ளது என்றார்.

அமெரிக்காவின் அலாஸ்கா நகரில் இரு நாட்டு அதிகாரிகளும் முதல்தடவையாக சில நாட்களுக்கு முன் நேரே சந்தித்து பேச்சு நடத்தியது சரியான திசையில் இடம்பெறும் ஒன்று என்று துணைப் பிரதமர் கூறினார்.

கொவிட்-19, பருவநிலை மாற்றம் போன்ற பொதுவான சவால்களைச் சமாளிக்க ஒத்துழைப்பது அந்த இரண்டு நாடுகளுக்குமே நன்மை பயக்கும் என்றும் திரு ஹெங் கூறினார். அமெரிக்காவும் சீனாவும் இந்த வட்டாரத்தில் ஆக்ககரமான முறையில் தொடர்ந்து தங்களை ஈடுபடுத்திக்கொள்ள வேண்டியதும் முக்கியமானது என்றார் அவர்.

இரண்டாவது உலகப் போருக்குப் பிறகு மிகவும் தேவைப்பட்ட நிலைப்பாட்டைச் சாதிக்க அமெரிக்கா இந்த வட்டாரத்தில் இருந்து உதவி வந்திருக்கிறது.

இந்த வட்டாரத்தின் வேகமான வளர்ச்சிக்கு அமெரிக்காவின் முதலீடுகள் மிகவும் உதவி இருக்கின்றன என்றும் திரு ஹெங் கூறினார். இந்த வட்டாரத்தில் தொடர்ந்து கடப்பாட்டுடன் பங்காளித்துவ உறவைப் பலப்படுத்தப் போவதாக அமெரிக்க அதிபரின் நிர்வாகம் அறிவித்துள்ளதை திரு ஹெங் வரவேற்றார்.

ஆசியான் அமைப்பு அமெரிக்காவின் முக்கியமான பங்காளி அமைப்பாகத் திகழ்கிறது என்பதை அவர் சுட்டினார். அதே நேரத்தில், சீனாவின் பொருளியல் வெற்றி இந்த வட்டார வளர்ச்சிக்கு வரப்பிரசாதமாக இருந்து வந்துள்ளதாகவும் திரு ஹெங் தெரிவித்தார்.

ஆகையால் ஆசியாவில் அமைதியும் நிலைப்பாடும் வளர்ச்சியும் தொடர்ந்து இருந்து வர வேண்டும் என்றால், அமெரிக்கா-சீனா இரு நாடுகளும் இந்த வட்டாரத்தில் ஆக்ககரமான முறையில் தொடர்ந்து தங்களை ஈடுபடுத்திக்கொண்டு வரவேண்டும் என்று திரு ஹெங் வலியுறுத்தினார்.

அமெரிக்கா, சீனா ஆகிய இரு நாடுகளோடு மட்டுமின்றி எல்லா தரப்புகளோடும் தென்கிழக்கு ஆசியா தொடர்ந்து செயல்பட்டு வரவேண்டும் என்றும் துணைப் பிரதமர் கூறினார்.

தென்கிழக்கு ஆசியா மேலும் முதலீடுகளைக் கவர வேண்டும் என்று தெரிவித்த திரு ஹெங், முதலீடுகளுக்கான நுழைவாயிலாக சேவையாற்றுவதன் மூலம் சிங்கப்பூர் இந்த வட்டாரத்தின் பங்காளியாகத் திகழ முடியும் என்றார்.

அதோடு மட்டுமின்றி, புத்தாக்கத்திற்கான உந்துத் தளமாகவும் சுற்றுச்சூழலைப் பாதுகாக்க உதவுகின்ற பசுமை மையமாகவும் சிங்கப்பூர் திகழ முடியும் என்றார் அவர்.

திரு ஹெங் நேற்றுக் கலந்துகொண்ட ஐந்து நாள் மெய்நிகர் கூட்டத்தில் ஆசியப் பசிபிக் பகுதியைச் சேர்ந்த அரசியல், பொருளியல், நிதி, கல்வித் துறை பிரமுகர்கள் கலந்துகொள்கிறார்கள். அந்தக் கூட்டம் வெள்ளிக்கிழமை முடிவடைகிறது.