இந்தியாவில் கொவிட்-19 கிருமிப்பரவல் அதிகரித்து வரும் நிலையில் நேற்று புதிய உச்சமாக 46,951 பேருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த ஆண்டில் ஒரு நாளில் பதிவான ஆக அதிகமான தொற்று எண்ணிக்கை இது. நேற்று முன்தினம் இந்த எண்ணிக்கை 43,000 ஆக இருந்தது.
இதில் மகாராஷ்டிரா, பஞ்சாப், கா்நாடகம், குஜராத், மத்திய பிரதேசம் ஆகிய ஐந்து மாநிலங்களில் 84.49% பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. மொத்த பாதிப்பு 11.6 மில்லியனுக்கும் அதிகமாக உள்ளது.
நேற்று ஒரே நாளில் 212 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் ஒட்டுமொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 159,967 ஆகியுள்ளது.
கிருமித்தொற்று அதிகரித்து வருவதால் கூடுதலாக 120 மில்லியன் தடுப்பூசிகளை இந்திய அரசு வாங்க உள்ளது.
கிருமிப் பரவலைக் கட்டுப்படுத்த மீண்டும் ஊரடங்கு விதிக்கலாமா என சில மாநில அரசுகள் பரிசீலித்து வரும் வேளையில், நாடு முழுவதும் மீண்டும் ஊரடங்கை நடைமுறைப்படுத்த வாய்ப்பில்லை என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கூறியுள்ளார்.

