ஆஸ்திரேலியா, சிங்கப்பூர் மாணவர்கள் உட்பட தடுப்பூசி போட்ட மாணவர்களை மீண்டும் நாட்டுக்குள் நுழைய அனுமதிப்பது அல்லது மாணவருக்கான சிறப்பு விமான சேவை, தனிமைப்படுத்தும் வசதிகளை உருவாக்குவது போன்ற அனைத்துலக கல்வித் துறையை மீண்டும் செயல்படுத்துவதற்கான வழிகளைத் தீவிரமாக ஆராய்ந்து வருகிறது.
ஆஸ்திரேலியாவின் அனைத்துலக மாணவர் துறை 2019ல் கிட்டத்தட்ட 40 பில்லியன் டாலர் (41.5 பி. சிங்கப்பூர் வெள்ளி) மதிப்புடையதாக, அந்நாட்டின் நான்காவது பெரிய ஏற்றுமதியாக இருந்தது. ஆனால் கொவிட்-19 கொள்ளை நோய் மாணவர் வரத்தை முடக்கிவிட்டது. அங்கு தற்போது 374,000 வெளிநாட்டினர் மாணவர் விசா வைத்திருக்கின்றனர். கிருமிப் பரவலுக்கு முன் இது 580,000 ஆக இருந்து.
2019ல் 8,325 ஆக இருந்த ஆஸ்திரேலிய கல்வி நிறுவனங்களில் சேர்க்கப்பட்ட சிங்கப்பூரர்களின் எண்ணிக்கை, 2020ல் 7,420 ஆகக் குறைந்தது.
தனிமைப்படுத்துதல் தேவையில்லாத இரு வழிப் பயணங்களை முதலில் தொடங்க சாத்தியமான பங்காளிகளாக சிங்கப்பூர், நியூசிலாந்து இரு நாடுகளையும் ஆஸ்திரேலியா குறிப்பிட்டுள்ளது.
பயணத்தைச் சாத்தியப்படுத்தும் தடுப்பூசி சான்றிதழ் முறை குறித்துப் பேச, அந்நாட்டு சுற்றுலாத்துறைத் அமைச்சர் டான் தெஹான் அடுத்த இரண்டு மாதங்களுக்குள் சிங்கப்பூர் வரத் திட்டமிட்டுள்ளார்.
ஆஸ்திரேலியாவுடன் மாணவர், வர்த்தகப் பயணிகளுக்கு முன்னுரிமை அளித்து பயணத்தை மீண்டும் தொடங்குவது பற்றிப் பேச இருப்பதாக சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சும் கூறியுள்ளது. எனினும், தனிமைப்படுத்தும் மையம் அல்லது தடுப்பூசி மையம் குறித்துப் பேசப்போவதில்லை என்று குறிப்பிட்டது.
நாட்டின் தடுப்பூசி இயக்கம் எல்லைகளைத் திறப்பதற்கும் மாணவர்களை அனுமதிப்பதற்கும் வழிவகுத்துள்ளது என்று குடிநுழைவு அமைச்சர் அலெக்ஸ் ஹாக் கூறினார். "அனைத்துலக எல்லைகளைத் திறக்க அரசாங்கம் தயாராகி வருகிறது," என்றார் அவர்.

