அடுத்த மாதம் 5ஆம் தேதியிலிருந்து 75% ஊழியர்கள் வரை வேலையிடம் திரும்பலாம் என்று இன்று நடைபெற்ற மெய்நிகர் செய்தியாளர் கூட்டத்தில் கொவிட்-19 பணிக் குழுவின் இணைத் தலைவரும் கல்வி அமைச்சருமான திரு லாரன்ஸ் வோங் தெரிவித்தார்.
தற்போது 50 விழுக்காடு ஊழியர்கள் மட்டுமே ஒரே நேரத்தில் வேலையிடத்தில் வேலை செய்யலாம்.
வேலை நேரத்தில் பாதியை வீட்டிலிருந்து நிறைவேற்றும் நடைமுறை முடிவுக்குக் கொண்டு வரப்படும் என்று சுகாதார அமைச்சு கூறியது.
ஊழியர்களை வெவ்வேறு பிரிவுகளாகப் பிரிக்கும் முறை இனி கட்டாயமானதாக இருக்காது என்று தெரிவிக்கப்பட்டது. ஆனால் வர்த்தக நோக்கத்துக்கான நிறுவனங்கள் இந்த உத்தியைத் தொடரலாம்.
வேலையிடத்தில் உள்ள வெவ்வேறு பிரிவுகளுக்கு ஊழியர்களை மாற்றும் முறைக்கு விதிக்கப்பட்ட தடை இன்னும் தொடர்ந்து நடப்பில் இருக்கும்.
"ஊழியர்களுக்கு வெவ்வேறு வேலை தொடங்கும் நேரங்களை நிர்ணயிப்பது, நீக்குப்போக்கான வேலை நேரத்தை நடைமுறைப்படுத்துவது ஆகியவற்றை பணிக்குழு ஊக்குவிக்கிறது. ஏற்கெனவே நடப்பில் இருக்கும் பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்ந்து கடைப்பிடிக்கப்படுவதை முதலாளிகள் உறுதி செய்ய வேண்டும்," என்றார் திரு வோங்.
முதலாளிகளால் ஏற்பாடு செய்யப்படும் வேலையிட சமூக, பொழுதுபோக்கு ஒன்றுகூடல்கள் அனுமதிக்கப்படும். ஆனால் அவற்றில் அதிகபட்சம் எட்டு பேர் மட்டுமே பங்கெடுக்கலாம் என்று சுகாதார அமைச்சு கூறியது.

