கொவிட்-19 கட்டுப்பாடுகள் தளர்வின் ஒரு பகுதியாக, அடுத்த மாதம் 24ஆம் தேதி முதல் குறிப்பிட்ட நிகழ்ச்சிகளில் அதிகமானோர் பங்கேற்க அனுமதிக்கப்படுவர். ஆயினும், அந்நிகழ்ச்சிகளைத் தொடங்குவதற்குமுன் கொவிட்-19 பரிசோதனை இடம்பெற வேண்டும். திருமண உறுதியேற்புச் சடங்கு, திருமண வரவேற்பு, நேரடி நிகழ்ச்சிகள், முன்னோட்ட வர்த்தக, விளையாட்டு நிகழ்ச்சிகள் போன்றவை அவற்றில் சில. நிகழ்ச்சிக்குக் குறைந்தது இரு வாரங்களுக்குமுன் இரண்டாம் முறையாகத் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் நிகழ்ச்சிக்குமுன் கொரோனா பரிசோதனை செய்துகொள்வதில் இருந்து விலக்கு அளிக்கப்படுவர் என்று சுகாதார அமைச்சு நேற்று தெரிவித்தது. நிகழ்ச்சிக்கு முந்திய பரிசோதனை குறித்த மேல்விவரங்கள் gov.sg இணையத்தளம் வாயிலாக அறிவிக்கப்படும். திருமண உறுதியேற்புச் சடங்குகளில் இப்போது 100 பேர் வரை மட்டுமே கலந்துகொள்ள முடியும் என்ற நிலையில், அவ்வரம்பு 250 பேராக உயர்த்தப்படவுள்ளது. ஆயினும், அதிகபட்சம் 50 பேர் கொண்ட குழுக்களாக அவர்கள் பிரிக்கப்பட வேண்டும். அந்த 250 பேரில் மணமக்களும் அடங்குவர். அதேபோல, நூறு பேருக்கு மேல் பங்கேற்றால் மணமக்களும் உறுதி ஏற்புச் சடங்கிற்குமுன் கொரோனா பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். அதேபோல, திருமண வரவேற்பு நிகழ்ச்சிகளில் பங்கேற்போருக்கான வரம்பும் 250 பேராக அதிகரிக்கப்படும். 50 பேர் கொண்ட குழுக்களாக அவர்கள் பிரிக்கப்பட வேண்டும். நூறு பேருக்குமேல் பங்கேற்கும் பட்சத்தில், நிகழ்ச்சிக்குமுன் மணமக்கள் உட்பட அனைவரும் கொரோனா பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். நேரடி நிகழ்ச்சிகளைப் பொறுத்தமட்டில், நிகழ்ச்சிக்கு முந்திய கொரோனா பரிசோதனைக்கு ஏற்பாடு செய்தால் 750 பேர் வரை கலந்துகொள்ளலாம். பரிசோதனைக்கு ஏற்பாடு செய்யாவிடில் அதிகபட்சம் 250 பேர் மட்டுமே கலந்துகொள்ள முடியும். நேரடி நிகழ்ச்சிகளுக்கான வழிகாட்டி நெறிமுறைகளை தேசிய கலைகள் மன்றம் பின்னர் வெளியிடும். நிகழ்ச்சிக்கு முந்திய பரிசோதனைக்கு ஏற்பாட்டுடன் கூடிய முன்னோட்ட வர்த்தக நிகழ்ச்சிகளில், 50 பேர் கொண்ட குழுக்களாக 750 பேர் வரை பங்கேற்கலாம். வழிகாட்டி நெறிமுறைகள், விண்ணப்ப விவரம் குறித்து சிங்கப்பூர் பயணத்துறைக் கழகம் பின்னர் வெளியிடும். நிகழ்ச்சிக்கு முந்திய பரிசோதனையுடன் கூடிய முன்னோட்ட விளையாட்டு நிகழ்ச்சிகளில் 750 பேர் வரை அமர்ந்து பார்க்க முடியும். ஸ்போர்ட்எஸ்ஜி அமைப்பு விரைவில் மேல்விவரங்களை வெளியிடும். உடலை நல்லடக்கம் அல்லது தகனம் செய்யும் நாளன்று, துக்க அனுசரிப்பு, இறுதிச் சடங்கு நிகழ்ச்சிகளில் ஒரு நேரத்தில் 50 பேர் வரை பங்கேற்க இயலும். துக்கம் அனுசரிக்கும் மற்ற நாள்களில், ஒரு நேரத்தில் 30 பேர் வரை மட்டுமே பங்கேற்கலாம். துக்க அனுசரிப்பு, இறுதிச் சடங்கு நிகழ்வுகளில் பங்கேற்போர், நிகழ்ச்சிக்கு முந்திய கொரோனா பரிசோதனை செய்துகொள்ளத் தேவையில்லை.
திருமண வரவேற்பில் 250 பேர் பங்கேற்கலாம்
2 mins read
திருமண உறுதியேற்புச் சடங்குகளில் கலந்துகொள்வோருக்கான உச்ச வரம்பு 250ஆக உயர்த்தப்படவுள்ளது. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

