மியன்மாரில் ஆர்ப்பாட்டம் செய்ததற்காக தடுத்து வைக்கப்பட்டவர்களில் 600 பேரை ராணுவ ஆட்சியாளர்கள் நேற்று விடுதலை செய்ததாக மூத்த சிறைத்துறை அதிகாரி ஒருவர் ஏஎஃப்பி செய்தி நிறுவனத்திடம் கூறினார். "இன்செய்ன் சிறைச்சாலையில் இருந்து இன்று (புதன்கிழமை) 360 ஆண்களையும் 268 பெண்களையும் விடுதலை செய்துவிட்டோம்," என்று சிறை அலுவலகத்தில் இருந்து அவர் கூறியதாக ஏஎஃப்பி குறிப்பிட்டது. இருப்பினும் அந்த அதிகாரி யார் என்ற விவரம் வெளியிடப்படவில்லை.
இதற்கிடையே, ராணுவ ஆட்சிக்கு எதிரான போராட்டத்தைத் தொடர மக்கள் முடிவு செய்துள்ளனர். ஏழு வயதுப் பெண் குழந்தை துப்பாக்கியால் சுடப்பட்டு மாண்டது பேரதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதன் பின்னர் மக்கள் வீடுகளில் இருந்தவாறும் வர்த்தக நிறுவனங்கள் கதவுகளை மூடிய நிலையிலும் அமைதி வழி போராட முடிவு செய்திருப்பதாகவும் ஏஎஃப்பி கூறியது.
மாண்டலே நகரில் ஆர்ப்பாட்டக்காரர்களை வீடு வீடாகத் தேடிச் சென்ற பாதுகாப்புப் படையினர் ஒரு வீட்டின் கதவை எட்டி உதைத்து துப்பாக்கியால் கண்மூடித்தனமாகச் சுட்டனர். அந்த வீட்டுக்குள் தமது தந்தையின் மடியில் அமர்ந்திருந்த சிறுமி துப்பாக்கித் தோட்டாவுக்குப் பலியானார். பின்னர் அவரது தந்தை மீதும் அவர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக அவரது மூத்த மகள் கூறியதாக ராய்ட்டர்ஸ் செய்தி தெரிவித்தது.
பிப்ரவரி 1ஆம் தேதி ராணுவம் ஆட்சிக்கவிழ்ப்பை நடத்திய பின்னர் அங்கு கொல்லப்பட்டு இருக்கும் ஆகக் குறைந்த வயதுடையவர் இச்சிறுமிதான். இந்தக் கொடூரச் செயலுக்கு உலக அளவிலான கண்டனக் குரல் ஓங்கி ஒலித்து வருகிறது.

