கொவிட்-19 தொடர்பான கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் கட்டம் கட்டமாக தளர்த்தப்பட்டு வருவதால் ஏப்ரல் 5 முதல் அதிகமான ஊழியர்கள் தங்களது வேலையிடத்திற்குத் திரும்பக்கூடும். வீட்டில் இருந்தும் அலுவலகத்தில் இருந்தும் வேலை செய்ய தனித்தனிக் குழுக்கள் என்பது இனி கட்டாயம் இல்லாமல் போகக்கூடும்.
வீட்டில் இருந்து வேலை செய்வது என்னும் இயல்புமுறை இனி 'நீக்குப்போக்கான மற்றும் கலப்பு முறை' என்ற நிலைக்கு சிங்கப்பூர் மாற இருப்பதாக கொவிட்-19க்கான அமைச்சுகள்நிலை பணிக்குழுவின் இணைத் தலைவர் லாரன்ஸ் வோங் அறிவித்தார்.
அதன்படி ஒரே நேரத்தில் வேலையிடத்துக்குச் செல்லக்கூடியவர்களின் தற்போதைய விகிதம் 50 விழுக்காடு என்பது 75 விழுக்காடாக உயர்த்தப்படுவதாகவும் அவர் நேற்று மெய்நிகர் வழியாக நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.
இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, ஊழியர்கள் தங்களது வேலை நேரத்தில் குறைந்தபட்சம் பாதி அளவு வீட்டில் இருந்து பணிபுரிய வேண்டும் என்பதை வலியுறுத்தும் தற்போதைய கட்டுப்பாடுகள் விலக்கப்படும் என்று சுகாதார அமைச்சு தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
குழுக்களாகப் பிரிக்கப்பட்ட ஏற்பாடுகளும் இனி கட்டாயமல்ல என்றாலும் வர்த்தகம் தொய்வின்றி சீராக நடைபெற நிறுவனங்கள் அத்தகைய ஏற்பாடுகளைத் தொடர்ந்து கடைப்பிடிக்கலாம் என்றும் ஊழியர்களை வெவ்வேறு வேலையிடங்களில் மாற்றுவது இன்னும் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அமைச்சு தெரிவித்தது.
"வேலை தொடங்கும் நேரத்தை இரு வேறு பிரிவினருக்கு வெவ்வேறு மாதிரி மாற்றிக்கொள்ளவும் வேலை நேரத்தில் நீக்குப்போக்கு முறையைப் பின்பற்றவும் முதலாளிகளை வலுவாக ஊக்குவிக்கிறோம். எவ்வாறு இருப்பினும் நடப்பிலுள்ள அனைத்து பாதுகாப்பு நிர்வாக நடை முறைகளையும் முதலாளிகள் தொடர்ந்து செயல்படுத்தவேண்டும்," என்று திரு வோங் கூறினார்.
"குழு பிணைப்பு நடவடிக்கைகள் உட்பட வேலையிடங்களில் முதலாளிகள் ஏற்பாடு செய்யும் சமூக, பொழுதுபோக்கு ஒன்றுகூடல்கள் அனுமதிக்கப்படும். இருப்பினும் அதுபோன்ற நிகழ்வுகளில் எட்டுப் பேருக்கும் கூடுதலாகக் கலந்துகொள்ளக்கூடாது என்னும் கட்டுப்பாட்டை முதலாளிகள் தொடரவேண்டும்," என்று சுகாதார அமைச்சு கூறியது.
மனிதவள அமைச்சு, தேசிய தொழிற்சங்க காங்கிரஸ், சிங்கப்பூர் தேசிய முதலாளிகள் சம்மேளனம் ஆகிய முத்தரப்புப் பங்காளிகள், தேவையான பாதுகாப்பான இடைவெளி, கொள்ளவு போன்றவற்றை வேலை தொடர்பான நிகழ்ச்சி களை ஏற்பாடு செய்யும்போது நிறுவனங்கள் பின்பற்றவேண்டும் என்று வலியுறுத்தின.
முகக்கவசங்களை அணியாமல் இருக்கும்போது நோய் பரவக்கூடிய அபாயம் அதிகமாக இருப்பதால் நிகழ்ச்சியில் உணவருந்துதல் முக்கிய அங்கமாக இருக்கக்கூடாது என்றும் உணவருந்தும் வேளைகளில் நிகழ்ச்சிகள் நடத்துவதை நிறுவனங்கள் முடிந்தவரை தவிர்த்துக்கொள்ள வேண்டும் என்றும் சுகாதார அமைச்சு தெரிவித்தது.
பொதுவான இடங்களை அடிக்கடி சுத்தம் செய்வது, பாதுகாப்பான இடைவெளியை உறுதிசெய்வது, எல்லா நேரங்களிலும் முகக்கவசம் அணிவது போன்ற பாதுகாப்பு நிர்வாக நடைமுறைகளைப் பின்பற்றுவதை முதலாளிகள் உறுதிசெய்யவேண்டும். இவற்றைப் பின்பற்றத் தவறும் முதலாளிகள் மீது அமலாக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று தெரிவித்த அமைச்சு, வேலையிடத்தை மூடும் சாத்தியமும் அதில் அடங்கும் என்றது.
எந்த நேரத்திலும் மாறக்கூடிய சூழல் நிலவுகிறது என்றும் அதற்கு முதலாளிகள் தயார்நிலையில் இருக்கவேண்டும் என்றும் கூறப்பட்டது.
"கொவிட்-19 கிருமித்தொற்று மீண்டும் பரவக்கூடிய அபாயம் ஏற்பட்டால் நமது நிலைப்பாட்டை அதற்கேற்ப சரிசெய்து, வேலையிடங்களில் மேலும் கடுமையான நடவடிக்கைகளை மீண்டும் அறிமுகம் செய்ய நேரிடலாம்," என்று சுகாதார அமைச்சு குறிப்பிட்டது.
ஏப்ரல் 5 முதல் நீக்குப்போக்கு வேலைமுறை; தனித்தனி ஊழியர் குழுக்கள் கட்டாயமல்ல

