பாதுகாப்பின்றி இயந்திரங்களைப் பயன்படுத்தியதால் கடந்தாண்டு 46 ஊழியர்கள் தங்களது கைகளையும் விரல்களையும் இழந்துள்ளனர். ஊழியர்களின் வாழ்க்கையிலும் வாழ்வாதாரத்திலும் நீண்ட கால தாக்கத்தை ஏற்படுத்தும் இத்தகைய காயங்கள் முன்கூட்டியே தடுக்கக்கூடியவை என்று மனிதவள மூத்த அமைச்சர் ஸாக்கி முகம்மது இவ்வாண்டின் ஸேப் ஹேன்ட்ஸ் இயக்கத்தை தொடங்கி வைத்தபோது தெரிவித்தார்.
"இத்தகைய சம்பவங்கள் மீண்டும் நிகழாதவண்ணம் நாம் விபத்தைத் தவிர்ப்பதற்கான முயற்சிகளைக் கட்டிக்காக்க வேண்டும்," என்று கூறிய திரு ஸாக்கி, விபத்துகளால் பாதிப்பு ஏற்படாவிட்டாலும் அபாயங்களைப் பற்றி உடனே மேல் நிர்வாகத்திற்குக் கூறும் சூழலை நிறுவனங்கள் உருவாக்கவேண்டும் என்று அவர் கூறினார்.
வேலையிட பாதுகாப்பு மற்றும் சுகாதார மன்றத்தால் தொடங்கப்பட்ட இந்த இயக்கம், இயந்திர பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை அதிகரிப்பதில் கவனம் செலுத்தும். அத்துடன், கைகள் மற்றும் விரல்களில் காயம் படாதவாறு வேலை செய்வது குறித்த வழிமுறைகளைப் பற்றிய விழிப்புணர்வையும் இது அதிகரிக்க முற்படுகிறது.
இயந்திரத்தால் ஏற்பட்ட விபத்துகளின் காரணமாக கடந்தாண்டு 1,756 காயங்கள் பதிவானதாக திரு ஸாக்கி தெரிவித்தார். இந்த எண்ணிக்கை 2019ஆம் ஆண்டில் 2,262 ஆக இருந்தது. ஆயினும், நோய்ப்பரவலை முறியடிக்கும் காலக்கட்டத்தின்போது ரத்து செய்யப்பட்ட வர்த்தக நடவடிக்கைகள் இதற்குக் காரணம் என அவர் சுட்டினார்.

