மார்ச் இறுதியில் வேலை ஆதரவுத் திட்ட வழங்குதொகை
வேலை ஆதரவுத் திட்டத்தின் கீழ் 3 பில்லியன் வெள்ளிக்கும் அதிகமான தொகை வழங்கப்படவுள்ளது. இம்மாதம் 30ஆம் தேதி முதல் 150,000 மேற்பட்ட முதலாளிகள் இந்த வழங்குதொகைக்குத் தகுதிபெறுவர்.
இந்த வழங்குதொகையால் இரண்டு மில்லியனுக்கும் மேற்பட்ட சிங்கப்பூர் ஊழியர்கள் பலன் அடைவர் என்று கூறப்படுகிறது.
முதலாளிகள் தங்களின் உள்ளூர் ஊழியர்களுக்காக கட்டாய மத்திய சேம நிதி சந்தாக்களைச் சென்ற ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் செலுத்தி வந்திருந்தால், இந்த வழங்குதொகைக்குத் தகுதிபெறுவர்.
நிதி அமைச்சும் சிங்கப்பூர் உள்நாட்டு வருவாய் ஆணையமும் இது குறித்து நேற்று கூட்டு அறிக்கை வெளியிட்டன.
2020ஆம் ஆண்டு செப்டம்பர், அக்டோபர், நவம்பர், டிசம்பர் மாதங்களில் மொத்த மாதாந்திர ஊதியத்தின் முதல் $4,600க்கு முதலாளிகள் 50% வரை நிதி ஆதரவு பெறுவர் என்று கூறப்படுகிறது.
ஆகக் கடுமையாக பாதிக்கப்பட்ட விமானத் துறை, ஆகாயத் துறை, சுற்றுப்பயணத் துறை முதலாளிகளுக்கு 50% நிதி ஆதரவு வழங்கப்படும்.
அதற்கு அடுத்து உணவுச் சேவைகள், சில்லறை வர்த்தகம், கலைகள் மற்றும் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள், நிலப் போக்குவரத்து, கடல் மற்றும் கடலோரத் துறைகளுக்கு 30% நிதி ஆதரவு உண்டு.
சென்ற ஆண்டு செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் தரப்பட்ட ஊதியங்களில் 50% நிதி ஆதரவைக் கட்டடச் சூழல் துறையின் முதலாளிகள் பெறுவர். நவம்பர், டிசம்பர் மாதங்களுக்கு இவர்களுக்கு 30% நிதி ஆதரவு வழங்கப்படும். எஞ்சிய துறைகளைச் சார்ந்த முதலாளிகளுக்கு 10% நிதி ஆதரவு கிடைக்கும்.
"கிருமி முறியடிப்பு காலத்திற்குப் பின், வர்த்தகங்கள் கட்டங்கட்டமாகத் திறக்கத் தொடங்கிஉள்ளன. இந்நிலையில் வேலை இடங்களில் தங்களின் செயல்பாடுகளைத் தொடங்க அனுமதி இல்லாத நிறுவனங்களுக்குத் தொடர்ந்து 50% நிதி ஆதரவு வழங்கப்படும். அந்த அனுமதி கிடைக்கும் வரை இந்த நிதி ஆதரவு நீடிக்கும், அல்லது 2021ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரை ஆதரவு இருக்கும்," என்று கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் நிறுவனங்கள் மீண்டும் தங்களின் செயல்பாடுகளைத் தொடங்கிய தேதியைச் சரிபார்த்த பின்னரே வேலை ஆதரவுத் திட்ட வழங்குதொகையை வர்த்தக தொழில் அமைச்சு கணக்கிடும் என்பதால் சுமார் 5,500 முதலாளிகளுக்கு மார்ச் மாதம் கிடைக்க வேண்டிய வழங்குதொகைகள் ஏப்ரல் இறுதிக்குத் தள்ளிப் போகலாம் என்று கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.
தங்களுக்கு வழங்கப்படும் தொகை குறித்து தகுதிபெறும் முதலாளிகளுக்கு வரும் நாட்களில் அஞ்சல் மூலம் தெரிவிக்கப்படும்.
கடிதத்தின் மின் வடிவத்தை 'myTax' இணையத்தளம் வாயிலாகவும் பார்வையிட முடியும்.
'ஒன்றிணைக்கும் வரவுசெலவுத் திட்டம்' கீழ் வேலை ஆதரவுத் திட்டம் சென்ற ஆண்டு பிப்ரவரி மாதம் அறிமுகப்படுத்தப்பட்டது.
இம்மாத இறுதியில் வழங்கப்படஉள்ள தொகையுடன் இதுவரை திட்டத்தின்கீழ் $24.5 பில்லியனுக்கும் மேற்பட்ட தொகை வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. சென்ற மாதம் அறிவிக்கப்பட்ட வரவுசெலவுத் திட்டத்தின்படி, தொடர்ந்து கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள துறைகளைச் சார்ந்த நிறுவனங்களுக்கு வேலை ஆதரவுத் திட்டம் மேலும் ஆறு மாதங்கள் நீட்டிக்கப்படும்.

