தமிழ் மாதங்களில் 12வது மாதமான பங்குனியும் நட்சத்திரங்களில் 12வதாக இருக்கும் உத்திரமும் இணையும் தெய்வீகத் திருநாள் பங்குனி உத்திரம். ஈசூனில் அமைந்துள்ள புனித மரம் ஸ்ரீ பாலசுப்பிரமணியர் கோயிலில் வரும் ஞாயிறு அன்று (28ஆம் தேதி) நடக்கும் பங்குனி உத்திரம் விழாவிற்கு ஆயிரக்கணக்கில் பக்தர்கள் திரள்வர் என்பதால் கோயில் நிர்வாகம் சில தகவல்களைப் பக்தர்களுக்கு வலியுறுத்த விரும்புகிறது.
கோயிலுக்குள் நுழையும் அனைத்து பக்தர்களும் முன்பதிவு செய்துகொள்ள வேண்டும். கோயிலின் இணையப் பக்கத்தில் பதிவுசெய்துகொள்ளலாம். பங்குனி உத்திரம் திருநாளில் நள்ளிரவு 12 மணி முதல் காலை 8.30 மணி வரை பால்குடங்கள் அனுமதிக்கப்படும்.
கோயில் முன்கூட்டியே தயார்செய்து வைத்திருக்கும் பால்குடங்களை மட்டுமே பக்தர்கள் நேர்த்திக்கடனுக்குப் பயன்படுத்தலாம். பால்குடம் காணிக்கை செலுத்துவோருக்குத் துணையாக ஒருவர் மட்டுமே செல்ல முடியும்.
பால்குடம் எடுக்காத பொதுமக்கள் காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை வழிபாட்டுக்காக கோயிலுக்குச் செல்லலாம்.
கொவிட்-19 கட்டுப்பாடுகளுக்கு இணங்க, காவடிகளும் அலகுக் காவடிகளும் கோயிலுக்குள் செல்ல இந்த ஆண்டில் அனுமதி கிடையாது.
திறன்பேசி இல்லாதவர்கள் மறக்காமல் தங்களது அடையாள அட்டையை எடுத்து வர வேண்டும் என்று அக்கோயிலின் செயலாளர் திரு அ.அண்ணாதுரை தெரிவித்தார். இன்று (27ஆம் தேதி) சனிக்கிழமை இரவு 7 மணியில் இருந்து நாளை இரவு 11.59 மணி வரை ஈசூன் தொழிற்பூங்கா 'ஏ'யின் ஒரு பகுதி வாகனப் போக்குவரத்திற்கு மூடப்படும்.
வாகன ஓட்டிகளுக்கு உதவவும் வழிகாட்டவும் அப்பகுதியில் பாதுகாவல் அதிகாரிகள் பணியமர்த்தப்பட்டு இருப்பர்.
"ஏற்கெனவே இணையத்தில் முன்பதிவு செய்துகொண்டவர்கள் பதிவு செய்த நேரத்திற்குள் வரும்படி கேட்டுக்கொள்கிறோம். அனை வரும் சுமூகமாக கோயிலுக்குள் சென்று வழிபாட்டில் ஈடுபட இது வழிவகுக்கும்," என்று வலியுறுத்தினார் திரு அண்ணாதுரை.
வானிலை நிலவரங்களைக் கருத்தில் கொண்டு குடைகளைஎடுத்து வருமாறும் பக்தர்கள் ஊக்குவிக்கப்படுகின்றனர்.
கோயிலை விட்டு பக்தர்கள் வெளியாகும்போது பிரசாத பொட்டலங்கள் வழங்கப்படும். மேல் விவரங்களுக்கு, https://www.htsbt.org.sg/ என்ற கோயிலின் இணையப் பக்கம் அல்லது அதன் ஃபேஸ்புக் பக்கத்திற்குச் செல்லலாம்.

