மியன்மாரில் ராணுவ ஆட்சியை எதிர்த்து அந்நாட்டில் பல ஆர்ப்பாட்டங்கள் நடைபெறுகின்றன. ஆர்ப்பாட்டக்காரர்களைக் கலைக்க பாதுகாப்புப் படையினரால் கட்டவிழ்க்கப்பட்ட வன்முறையால் பலர் உயிரிழந்துள்ளனர். மியன்மார் ஆயுதப் படைகள் தினம் நேற்று கொண்டாடப்பட்டது. அதே சமயத்தில் குறைந்தது 16 ஆர்ப்பாட்டக்காரர்கள் மாண்டதாக மியன்மார் ஊடகம் தெரிவித்தது. இந்நிலையில், ஆர்ப்பாட்டக்காரர்களை இரும்புக் கரம் கொண்டு நசுக்கும் போக்கிற்கு மியன்மாரில் உள்ள சிறுபான்மை இனத்தவர்கள் போராளி அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளனர். இனி ஓர் ஆர்ப்பாட்டக்காரர் உயிரிழந்தாலும்கூட பொறுத்துக்கொள்ளப்போவதில்லை என்றும் மியன்மார் பாதுகாப்புப் படையினருக்குத் தக்க பதிலடி கொடுக்கப்படும் என்றும் ஷான் மாநில மீட்பு போராளி அமைப்பின் தலைவர் ஜெனரல் யோட் செர்க் சூளுரைத்துள்ளார். தாய்லாந்து எல்லை அருகில் இயங்கும் இந்த அமைப்பு ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு ஆதரவாகக் களமிறங்கும் என உறுதி அளித்துள்ளது. அதே போல பல போராளி அமைப்புகளும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு ஆதரவு தெரிவித்துள்ளன.
'இன்னும் ஓர் உயிரிழப்பு ஏற்பட்டாலும் பொங்கி எழுவோம்'
1 mins read
மியன்மார் ராணுவத்திற்கு எச்சரிக்கை விடுத்திருக்கும் ஷான் மாநில மீட்பு போராளி அமைப்பின் தலைவர் ஜெனரல் யோட் செர்க். படம்: ராய்ட்டர்ஸ் -

