இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் வருகையை எதிர்த்து பங்ளாதேஷில் உள்ள தீவிர இஸ்லாமிய அமைப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்தின்போது வன்முறை வெடித்தது. இதனை அடுத்து, நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வர எல்லைப் பாதுகாப்புப் படையினர் அங்கு நிறுத்தப்பட்டுள்ளனர்.
தலைநகர் டாக்காவில் உள்ள பிரதான பள்ளிவாசலில் வன்முறை தொடங்கியது. படிப்படியாக அது மற்ற மாவட்டங்களுக்கும் பரவியது. இதில் ஐந்து பேர் மாண்டனர். பலர் காயமுற்றனர்.
வன்முறை தொடர்பான படங்களும், செய்திகளும் ஃபேஸ்புக் மூலம் பகிர்ந்துகொள்ளப்பட்டதால் அச்சேவையை பங்ளாதேஷ் கட்டுப்படுத்தியுள்ளது.
2002ஆம் ஆண்டில் குஜராத் மாநிலத்தில் முஸ்லிம்களுக்கு எதிராக வன்முறையை மோடி தூண்டியதாக பங்ளாதேஷில் உள்ள சில முஸ்லிம் அமைப்புகள் குற்றம் சுமத்துகின்றனர். அந்தக் கலவரத்தில் ஏறத்தாழ 1,000 பேர் மாண்டவர். கலவரம் நடந்தபோது குஜராத் மாநிலத்தின் முதல்வராக திரு மோடி பதவி வகித்தார்.

