இந்தியாவில் கொரோனா பாதிப்பு ஐந்து மாதங்களில் புதிய உச்சம்

இந்தியாவில் கொரோனா பாதிப்பு ஐந்து மாதங்களில் புதிய உச்சம்

2 mins read
ced422e1-6847-40f0-9b1a-a0f092c50d29
சென்னையில் கொவிட்-19 மருத்துவப் பரிசோதனைக்கு உட்பட்ட போலிஸ் அதிகாரி. படம்: ஏஎஃப்பி -

இதுவரை இல்லாத அளவாக நேற்று காலை வரையிலான 24 மணி நேரத்தில் புதிதாக 62,258 பேருக்கு கொரோனா கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டது.

இந்தியாவில் 59,118 பேருக்குத் தொற்று உறுதியானதாக நேற்று முன்தினம் அறிவிக்கப்பட்டிருந்தது. அதைவிட இந்த எண்ணிக்கை 5.3 விழுக்காடு அதிகம்.

கடந்த ஆண்டு அக்டோபர் 16ஆம் தேதிக்குப் பிறகு ஒரே நாளில் இத்தனை பேருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பது இதுவே முதன்முறை. அக்டோபர் 16ஆம் தேதி 63,371 பேருக்குத் தொற்று உறுதிப்படுத்தப்பட்டு இருந்தது.

அவர்களையும் சேர்த்து இந்தியாவில் இதுவரை தொற்றால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 11.9 மில்லியனாக உயர்ந்துவிட்டதாக இந்திய சுகாதார அமைச்சு நேற்று காலை வெளியிட்ட தகவல் தெரிவித்தது.

தற்போது கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை தொடர்ந்து 17வது நாளாக ஏறுமுகம் கண்டு 452,647 ஆக உயர்ந்தது. இந்தியாவில் இதுவரை பதிவாகியுள்ள மொத்த தொற்று எண்ணிக்கையில் இது 3.8 விழுக்காடாகும். அதே வேளையில், கிருமித்தொற்றில் இருந்து குணம் அடைந்தோர் விகிதம் 94.85 விழுக்காடாகக் குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், மூன்று மாதங்களில் ஆக அதிகமாக கிருமித்தொற்றுப் பாதிப்பால் ஒரே நாளில் 291 பேர் உயிரிழந்துவிட்டதாக இந்திய சுகாதார அமைச்சின் தகவல் தெரிவித்தது.

இந்தியாவில் கிருமித்தொற்றால் ஆக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ள மகாராஷ்டிர மாநிலத்தில் இன்று முதல் இரவுநேர ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று அம்மாநில முதல்வர் உத்தவ் தாக்கரே அறிவித்துள்ளார். மகாராஷ்டிராவில் மட்டும் புதிதாக கிட்டத்தட்ட 37,000 பேருக்குத் தொற்று உறுதியானது. அந்த மாநிலத் தலைநகர் மும்பையில் புதிய உச்சமாக 5,500க்கும் அதிகமானோருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டது.

மகாராஷ்டிராவில் ஊரடங்கு காரணமாக அங்கு கடைத்தொகுதிகள் இரவு 8 மணி முதல் காலை 7 மணி வரை மூடப்படும்.

இந்தியாவில் நாளுக்கு நாள் தொற்று அதிகரித்து வருவதால் நாடளாவிய தடுப்பூசித் திட்டத்தைத் தீவிரப்படுத்தும் முயற்சியில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். அந்நாட்டில் ஜனவரியில் தடுப்பூசித் திட்டம் தொடங்கியது முதல் இதுவரை 58.1 மில்லியனுக்கும் அதிகமானோருக்குத் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. நேற்று காலை வரையிலான 24 மணி நேரத்தில் 2.6 மில்லியன் பேர் தடுப்பூசி போட்டுக்கொண்டனர்.

குறிப்புச் சொற்கள்