பருவநிலை மாநாடு: பிரதமருக்கு அதிபர் ஜோ பைடன் அழைப்பு

பருவநிலை மாநாடு: பிரதமருக்கு அதிபர் ஜோ பைடன் அழைப்பு

2 mins read
6711a1d9-9179-4179-affa-31c434e2e16c
அமெரிக்க அதிபர் ஜோ பைடன். படம்: இபிஏ -
multi-img1 of 2

பருவநிலை மாற்றம் குறித்து விவாதிக்க சிங்கப்பூர் பிரதமர் லீ உட்பட நாற்பது நாடுகளின் தலைவர்களுக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அழைப்பு விடுத்துள்ளார்.

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டின், சீன அதிபர் ஸி ஜின்பிங் ஆகியோருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக வெள்ளை மாளிகை பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

முன்னாள் அதிபர் டோனால்ட் டிரம்ப்பின் நிர்வாகம், பருவநிலை மாற்றத்திற்கு எதிரான நடவடிக்கைகளிலிருந்து அதிரடியாக பின் வாங்கியது.

புதிய அதிபராக பொறுப்பு ஏற்றதுமே ஜோ பைடன், இந்த விவகாரத்தில் மீண்டும் முன்னிலை வகிக்க முடிவு செய்துள்ளார்.

பூமி நாளைக் குறிக்கும் ஏப்ரல் 22ஆம் தேதி இரண்டு நாள் உச்சநிலை மாநாடு தொடங்குகிறது.

"சீன அதிபர் ஸி, ரஷ்ய அதிபர் புட்டின் ஆகியோருக்கு தாங்கள் அழைக்கப்பட்டுள்ளது தெரியும். ஆனால் மாநாடு குறித்து அவர்களிடம் அதிபர் பைடன் இன்னமும் நேரடியாக பேசவில்லை," என்று வெள்ளை மாளிகை பேச்சாளர் குறிப்பிட்டார்.

கொள்ளைநோய்ப் பரவல் காரணமாக மாநாடு முழுவதும் மெய்நிகர் காணொளி வழியாக நடக்குமென தெரிவிக்கப்பட்டுள்ளது. டோனல்ட் டிரம்ப் விலகிய பாரிஸ் பருவநிலை உடன்பாட்டில் மீண்டும் அமெரிக்கா சேர்ந்துகொள்ளும் என்று வெள்ளை மாளிகையில் பதிவியேற்ற முதல் நாளில் ஜோ பைடன் உறுதி வழங்கியிருந்தார்.

பருவநிலை மாற்றத்தால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைச் சமாளிக்கும் முயற்சிகளுக்குத் தலைமை தாங்க மீண்டும் அமெரிக்கா முன்வந்து இருப்பதைக் குறிக்கும் வகையில் அடுத்த மாதம் இரு நாள் உச்சநிலை மாநாடு நடக்கிறது.

ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் நவம்பர் மாதம் பருவநிலை மாற்றம் தொடர்பான ஐநா பெரும் கூட்டம் நடக்கிறது. இதற்கு முன்னதாக அதிபர் பைடன் உலகத் தலைவர்களைக் கூட்டுகிறார்.

பருவநிலை மாற்றத்தைச் சமாளிப்பதற்கான உடன்பாடு 2015ல் கையெழுத்தானது.

உலகின் மாபெரும் பொருளியல் சக்தியாக விளங்கும் அமெரிக்கா கடந்த பிப்ரவரி 19ல் தன்னை அந்த உடன்பாட்டில் மீண்டும் இணைத்துக்கொண்டது.

உலகில் கரியமில வாயுவை அதிகமாக வெளியிடும் நாடுகளில் அமெரிக்கா இரண்டாவது இடத்தில் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்க அதிபர் அழைப்பு விடுத்துள்ள உலகத் தலைவர்களில், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும் ஜப்பான், பிரேசில், கனடா, இஸ்ரேல், சவூதி அரேபியா, பிரிட்டன் ஆகிய நாடுகளின் தலைவர்களும் குறிப்பிடத்தக்கவர்கள்.