எகிப்தின் தெற்குப் பகுதியில் நேற்று முன்தினம் இரு ரயில்கள் ஒன்றோடு ஒன்று மோதிக்கொண்ட விபத்தில் குறைந்தது 32 பேர் மரணமடைந்தனர். இதில் 160க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.
தலைநகர் கெய்ரோவில் இருந்து 460 கிலோ மீட்டர் தெற்கில் அமைந்து உள்ள டாஹ்டா எனும் மாவட்டத்தில் இந்த விபத்து நிகழ்ந்தது.
காயமடைந்தோரை மருத்துவமனைக்குக் கொண்டுசெல்ல 100க்கும் மேற்பட்ட அவசர மருத்துவ வாகனங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தன.
விபத்தில் காயம் அடைந்தவர்களில் 70 விழுக்காட்டினருக்கு எலும்புமுறிவு ஏற்பட்டதாக எகிப்திய சுகாதார அமைச்சு தெரிவித்தது.
ரயில் பெட்டிகளுக்குள் சிக்கிக்கொண்ட பயணிகளைக் காட்டும் புகைப்படங்கள் ஃபேஸ்புக்கில் பதிவேற்றம் செய்யப்பட்டன. இடிபாடுகளில் இருந்து தங்களை விடுவித்துக்கொள்ள முயற்சி செய்த அவர்கள், உதவிக்காக அலறுவதை அந்தப் படங்கள் காட்டின.
"பயணிகள் உயிருக்காக போராடிக்கொண்டு இருக்கின்றனர்! அதிகாரிகள் எங்கே? எங்களுக்கு உதவுங்கள்!" என்று இளையர் ஒருவர் கத்தினார்.
இந்த விபத்துக்கான காரணம் குறித்து அதிகாரிகள் விசாரணையைத் தொடங்கியுள்ளனர். விபத்துக்குள்ளான ரயில் பெட்டிகள் சிலவற்றில் அடையாளம் காணப்படாத பயணிகள் அவசர நேரத்தில் பயன்படும் 'பிரேக்'குகளை அழுத்தியதாக எகிப்திய ரயில்வே ஆணையம் கூறியது.
இந்த விபத்து ஏற்படக் காரணமானோருக்கு கடும் தண்டனை விதிக்கப்படும் என்று எகிப்திய அதிபர் அப்துல் ஃபத்தா அல் சிசி உறுதிபூண்டுள்ளார்.
விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்க அவர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு உள்ளார்.

