90க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்
மியன்மாரின் பல பகுதிகளில் ஜனநாயக ஆதரவாளர்கள் மீது பாதுகாப்புப் படையினர் நேற்று நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 90க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதாக 'மியன்மார் நவ்' செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
அந்நாட்டின் இரண்டாவது பெரிய நகரமான மாண்டலேயில் 13 பேரும் வணிகத் தலைநகர் யங்கூனில் எழுவரும் கொல்லப்பட்டதாக அந்நிறுவனம் கூறியது.
மியன்மார் ராணுவத் தலைவர்கள் நேற்று ஆயுதப்படை தினத்தைக் கொண்டாடிய வேளையில் ஆர்ப்பாட்டக்காரர்களின் "தலை, முதுகுப் பகுதியில்" துப்பாக்கிச்சூடு நடத்தப்படக்கூடும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டது. அதைப் பொருட்படுத்தாமல் ராணுவத்தின் ஆட்சிக்கவிழ்ப்பை எதிர்த்து யங்கூன், மாண்டலே உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் ஏராளமான ஆர்ப்பாட்டக்காரர்கள் வீதிகளில் திரண்டனர்.
"இன்றைய (நேற்றைய) தினம் ஆயுதப்படைக்கு அவமானமிக்க தினம்," என்று 'சிஆர்பிஎச்' எனும் ராணுவ எதிர்ப்புக் குழுவின் பேச்சாளரான டாக்டர் சாசா இணையக் கருத்தரங்கு ஒன்றில் கூறினார்.
"ராணுவத் தலைவர்கள் 300க்கும் மேற்பட்ட அப்பாவி மக்களைக் கொன்றுவிட்டு ஆயுதப்படை தினத்தைக் கொண்டாடுகின்றனர்," என்று அவர் சொன்னார்.
இந்நிலையில், ஆயுதப்படை தினத்தைக் குறிக்கும் விதமாக தலைநகர் நேப்பிடோவில் ராணுவ அணிவகுப்பைப் பார்வையிட்ட பிறகு அரசாங்கத் தொலைக்காட்சியில் பேசிய ராணுவத் தலைவர் மின் ஆங் ஹிலைங், மியன்மாரில் பொதுத்தேர்தல் நடத்தப்படும் என்று வாக்குறுதி அளித்தார். ஆனால் அதற்கான கால அட்டவணையை அவர் குறிப்பிடவில்லை.
"ஜனநாயகத்தை முன்னிறுத்த நாட்டு மக்களுடன் சேர்ந்து கைகோக்க ராணுவம் விரும்புகிறது," என்ற அவர், கோரிக்கைகளை முன்வைக்க நிலைத்தன்மையையும் பாதுகாப்பையும் பாதிக்கும் வகையில் ஆர்ப்பாட்டக்காரர்கள் நடந்துகொள்வதை ஏற்க முடியாது," என்று விவரித்தார்.

