வடக்கு-கிழக்கு ரயில் பாதையில் தடைப்பட்ட சேவை

வடக்கு-கிழக்கு ரயில் பாதையில் தடைப்பட்ட சேவை

1 mins read
c487b1b9-2db9-4356-ac1f-50abcfd8d1eb
வடக்கு-கிழக்கு ரயில் பாதை சேவைத் தடையால் பாதிக்கப்பட்ட எம்ஆர்டி நிலையங்களில் செங்காங் எம்ஆர்டி நிலையமும் ஒன்று. அங்கிருந்த பயணிகள் இணைப்புப் பேருந்துகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டனர். படம்: சாவ்பாவ் -

இன்று காலை கிட்டத்தட்ட மூன்று மணி நேரத்துக்கு வடக்கு-கிழக்கு ரயில் பாதையில் மின்தடை காரணமாக ரயில் சேவை தடைப்பட்டது. இதனால் சிராங்கூன் எம்ஆர்டி நிலையத்துக்கும் பொங்கோல் எம்ஆர்டி நிலையத்துக்கும் இடையிலான ரயில் சேவை பாதிக்கப்பட்டது. இந்நிலையில், ரயில் சேவை வழக்கநிலைக்குத் திரும்பிவிட்டதாக காலை 9.53 மணி அளவில் எஸ்பிஎஸ் டிரான்சிட் நிறுவனம் டுவிட்டரில் பதிவிட்டது. இருப்பினும், அடுத்த அறிவிப்பு வரை பாதிக்கப்பட்ட நிலையங்களில் இலவச, இணைப்புப் பேருந்துச் சேவைகள் வழங்கப்படும் என அது அப்போது கூறியிருந்தது. காலை 10.18 மணி அளவில் குறிப்பிட்ட பேருந்து நிறுத்தங்களில் வழங்கப்பட்ட இலவச, இணைப்புப் பேருந்துச் சேவைகள் நிறுத்தப்படுவதாக எஸ்பிஎஸ் டிரான்சிட் நிறுவனம் டுவிட்டர் மூலம் தெரிவித்தது. ரயிலுக்கு மின்சாரத்தை விநியோகிக்கும் இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டதால் மின்தடை ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. புவாங்கோக் எம்ஆர்டி நிலையத்தில் இயந்திரத்தின் ஒரு பகுதி பழுதடைந்தாகவும் பழுதுபார்ப்புப் பணிகளில் தமது பொறியாளர்கள் ஈடுபட்டிருப்பதாகவும் எஸ்பிஎஸ் டிரான்சிட் கூறியது. பழுதுபார்ப்புப் பணிகள் மூன்று மணி நேரத்தில் முடிந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுவதாக அது தெரிவித்தது. ரயில் சேவை தடைப்பட்டதற்குப் பயணிகளிடம் எஸ்பிஎஸ் டிரான்சிட் நிறுவனம் மன்னிப்பு கேட்டுக்கொண்டது.