ஈஸ்ட் கோஸ்ட் பூங்காவில் இருந்த பிக் ஸ்பிளாஷ் நீர் சாகசப் பூங்கா தற்போது குடும்பங்களுக்கு ஏற்புடைய பொழுதுபோக்கு இடமாக மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இந்தப் புதிய பூங்காவுக்கு 'கோஸ்ட்டல் பிளேகிரோவ்' எனப் பெயரிடப்பட்டுள்ளது
இன்று அதிகாரபூர்வமாக திறக்கப்பட்ட இந்த புதிய பூங்காவில் நீர் விளையாட்டுக் குளங்களும் 7.3 மீட்டர் மற்றும் 11.9 மீட்டர் உயரமுள்ள சுரங்க சறுக்கு பலகைகளும் இடம்பெற்றுள்ளன.
பிக் ஸ்பிளாஷ் 2006ஆம் ஆண்டில் மூடப்பட்டது. பிறகு அங்கு உணவகங்களும் வாழ்வியல் அம்சங்களும் அமைக்கப்பட்டன. இதுவும் 2016ஆம் ஆண்டில் மூடப்பட்டது.
பழைய பிக் ஸ்பிளாஷ் கோபுரம் மறுசீரமைக்கப்பட்டுள்ளது. அந்த 16 மீட்டர் உயரமுள்ள கோபுரத்தில் பல வண்ணங்களிலான வலைகள் செங்குத்தாக பொருத்தப்பட்டுள்ளன. இளையர்கள் விளையாட ஏற்புடைய இடமாக அது அமைக்கப்பட்டுள்ளது.
5 வயதுக்கும் 12 வயதுக்கும் இடைப்பட்ட சிறுவர்கள் விளையாட கோபுரத்தில் கீழ்ப் பகுதியில் வலைகள் பொருத்தப்பட்டுள்ளன.
3 வயதுக்கும் 12 வயதுக்கும் இடைப்பட்ட சிறுவர்களுக்காக சிறப்புத் தோட்டம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.
அதுமட்டுமல்லாது, பாலர் பள்ளி மாணவர்களுக்காக கடலோர வெளிப்புற வகுப்பறையும் அங்கு உள்ளது.
பிரதான நீச்சல் குளத்துக்கும் நீருற்றுகளுக்கும் சக்கரநாற்காலி பயன்படுத்துவோர் எளிதில் செல்ல தகுந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
புதிய பூங்காவுக்குச் செல்பவர்களுக்காக பொழுதுபோக்கு அம்சங்கள், உணவகங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
கோஸ்ட்டல் பிளேகிரோவ் பூங்காவை ஒய்வுபெற்ற கௌரவ மூத்த அமைச்சர் கோ சோக் டோங்கும் மவுண்ட்பேட்டன் குழுத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் லிம் பியாவ் சுவானும் இன்று காலை மரம் ஒன்றை நட்டுவைத்து அதிகாரபூர்வமாக திறந்துவைத்தனர்.

