தோ பாயோ வெஸ்ட்டில் புதிய ரத்த சுத்திகரிப்பு மையம்

தோ பாயோ வெஸ்ட்டில் புதிய ரத்த சுத்திகரிப்பு மையம்

2 mins read
0abc6378-09ea-45e9-895e-dcd1ab53e27e
ரத்த சுத்திகரிப்பு செய்முறையை வெளியுறவு, போக்குவரத்து மூத்த துணை அமைச்சர் சீ ஹோங் டாட்டிடம் (இடது) விளக்கும் தாதியர் நிர்வாகி டோலி பொன்னியில் பௌலோஸ். படம்: தேசிய சிறுநீரக அறநிறுவனம் -

தோ பாயோ வெஸ்ட் சமூக மன்றத்தில் புதிய ரத்த சுத்திகரிப்பு மையம் அதிகாரபூர்வமாக நேற்று திறக்கப்பட்டது. இதையடுத்து, ரத்த சுத்திகரிப்பு செய்துகொள்ள வேண்டியிருக்கும் தோ பாயோ வெஸ்ட்வாசிகள் இனி தங்கள் வீட்டிற்கு அருகிலேயே அதனைச் செய்துகொள்ள முடியும்.

மன்றத்தின் மூன்றாம் தளத்தில் அமைந்துள்ள அந்த 'செக் ஹொங் சூன் - தேசிய சிறுநீரக அறநிறுவன' ரத்த சுத்திகரிப்பு மையத்தை வெளியுறவு, போக்குவரத்து மூத்த துணை அமைச்சர் சீ ஹொங் டாட் திறந்து வைத்தார்.

சமூக மன்றத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ள தேசிய சிறுநீரக அறநிறுவனத்தின் முதல் ரத்த சுத்திகரிப்பு மையம் இதுதான். தேசிய சிறுநீரக அறநிறுவனம், தோ பாயோ வெஸ்ட் சமூக மன்றம், கோங் மெங் சான் ஃபோர் கார்க் சீ மடாலயம் ஆகியவற்றின் கூட்டுமுயற்சியில் இம்மையம் திறக்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்திற்காக கோங் மெங் சான் ஃபோர் கார்க் சீ மடாலயம் 1.4 மில்லியன் வெள்ளி நன்கொடை அளித்துள்ளது.

தீவு முழுவதும் தேசிய சிறுநீரக அறநிறுவனத்தின் 39 ரத்த சுத்திகரிப்பு மையங்கள் அமைந்துள்ளன. அவை பெரும்பாலும் வீடமைப்பு வளர்ச்சிக் கழகப் பேட்டைகளின் பொதுவெளிகளில் அமைந்துள்ளன.

தோ பாயோ வெஸ்ட்டில் அமைக்கப்பட்டுள்ள புதிய ரத்த சுத்திகரிப்பு மையத்தில் 20 சுத்திகரிப்புச் சாதனங்கள் இருப்பதாகவும் அவற்றின்மூலம் 120 நோயாளிகள் வரைக்கும் சேவை வழங்க இயலும் என்றும் தேசிய சிறுநீரக அறநிறுவனத்தின் தலைவர் ஆர்தர் லாங் கூறினார்.

சிறுநீரகச் சுகாதாரம் தொடர்பில் மக்களைச் சென்றடையும், ஆதரவு வழங்கும் நடவடிக்கைகளை அதிகப்படுவத்துவதன் மூலம் சமூகத்தை ஈடுபடுத்த தேசிய சிறுநீரக அறநிறுவனம் திட்டமிட்டுள்ளதாக திரு லாங் குறிப்பிட்டார்.

சிறுநீரக நோய்கள் தடுப்பு, நிர்வாகம் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக தோ பாயோ வெஸ்ட் - தாம்சன் அடித்தள அமைப்புகளைப் பங்காளிகளாகச் சேர்த்துக்கொண்டு, தேசிய சிறுநீரக அறநிறுவனம் செயல்பட்டு வருவதாகவும் அவர் சொன்னார்.