மியன்மார் ராணுவம் ஒரே நாளில் நூற்றுக்கு மேற்பட்டோரைக் கொன்று குவித்ததற்கு அமெரிக்கா உள்ளிட்ட 12 நாடுகளின் ராணுவத் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
மக்களின் நம்பகத்தன்மையை மியன்மார் ராணுவம் இழந்துவிட்டது என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.
மியன்மாரில் கடந்த பிப்ரவரி 1ஆம் தேதி ஜனநாயக ஆட்சியைக் கவிழ்த்து, நிர்வாகத்தை ராணுவம் கைப்பற்றியது. அதனை எதிர்த்து, அங்கு தொடர்ந்து ஆர்ப்பாட்டங்களும் பேரணிகளும் இடம்பெற்று வருகின்றன.
அதனை ஒடுக்க ராணுவம் ஆயுதங்களைப் பயன்படுத்தி வந்தாலும் ஜனநாயக ஆதரவு ஆர்ப்பாட்டக்காரர்கள் அசராமல் தொடர்ந்து தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், மியன்மாரில் நேற்று முன்தினம் ஆயுதப்படை நாள் அனுசரிக்கப்பட்ட நிலையில், குழந்தைகள் உட்பட 114 பேரைப் பாதுகாப்புப் படையினர் கொன்று குவித்ததாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதையடுத்து, ஆட்சிக் கவிழ்ப்பிற்குப் பிறகு, ஆக மோசமாக ரத்தக் கறை படிந்த நாளாக அது அமைந்துவிட்டது.
இந்நிலையில், அதனைக் கண்டித்து அமெரிக்கா, ஆஸ்திரேலியா, கனடா, டென்மார்க், ஜெர்மனி, கிரீஸ், இத்தாலி, ஜப்பான், நெதர்லாந்து, நியூசிலாந்து, தென்கொரியா, பிரிட்டன் ஆகிய நாடுகளின் ராணுவத் தலைவர்கள் கூட்டறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
அதில், "தற்காப்புப் படைகளின் தலைவர்களாக, ஆயுதமின்றி போராடிய மக்கள் மீது மியன்மார் ஆயுதப் படையும் துணை பாதுகாப்புப் படைகளும் ஆபத்தான ஆயுதங்களைப் பயன்படுத்தியதைக் கண்டிக்கிறோம்," என்று அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
முன்னதாக, அந்நாடுகளின் தூதர்களும் மியன்மார் ராணுவத்தின் ரத்தக்களரிக்குக் கண்டனம் தெரிவித்திருந்தனர்.
ஆயினும், தன் மீதான கண்டனங்களையும் விமர்சனங்களையும் கண்டுகொள்ளாத மியன்மார் ராணுவம், எதிர்ப்பாளர்களை ஒடுக்குவதிலேயே குறியாக இருக்கிறது.
'கொன்றொழிப்பு நடவடிக்கை'
ஒரே நாளில் நூற்றுக்கு மேற்பட்ட உயிர்களை இழந்ததற்காக துக்கம் அனுசரித்து வந்தாலும், ராணுவ ஆட்சியை முடிவிற்குக் கொண்டு வரும் வரை தொடர்ந்து போராட மியன்மார் ஜனநாயக ஆதரவாளர்கள் உறுதிபூண்டுள்ளனர்.
"இந்தப் புரட்சியில் உயிர்நீத்த எங்களின் நாயகர்களுக்குத் தலைவணங்குகிறோம். இப்புரட்டசியில் நாம் வென்றாக வேண்டும்," என்று போராட்டக் குழுக்களில் முதன்மையானதாகக் கூறப்படும் 'ஜிஎஸ்சிஎன்' குழு ஃபேஸ்புக் வழியாகத் தெரிவித்து இருக்கிறது.
இதற்கிடையே, மியன்மார் ராணுவம் மக்களைக் 'கொன்று ஒழிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாக ஐநா புலனாய்வாளர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
"இந்த ரத்தக்களரி பயங்கரமானதாக இருக்கிறது. எனினும், ராணுவ ஆட்சியின்கீழ் வாழ விரும்பவில்லை என்பதில் மியன்மார் மக்கள் தெளிவாக உள்ளனர்," என்கிறார் ஐநா தூதர் தாமஸ் வய்டா.
மியன்மார் வரலாற்றில் கடந்த சனிக்கிழமை ஒரு பயங்கரவாத, அவமதிப்பு நாளாக என்றென்றும் பொறிக்கப்பட்டிருக்கும் என்று மியன்மாருக்கான ஐரோப்பிய ஒன்றியத்தின் பேராளர் குழு குறிப்பிட்டுள்ளது.

