அடுத்த தேர்தலில் தனித்துப் போட்டியிட தயாராகுமாறு ஸாஹிட் ஹமிடி அழைப்பு
மலேசியாவின் அடுத்த பொதுத் தேர்தலில் பிரதமர் முகைதீன் யாசினின் பெர்சத்து கட்சியுடனான உறவை முறித்துக்கொள்ள அம்னோ தலைமைத்துவம் முடிவெடுத்துள்ளது.
அதற்குக் கட்சிக்குள்ளேயே எதிர்ப்பு எழுந்துள்ள நிலையில், மலேசிய அரசியலில் அம்னோ மீண்டும் ஆதிக்கம் செலுத்த எடுத்து வரும் நடவடிக்கைகளை எதிர்ப்பாளர்கள் கீழறுக்க முயல்வதாக அக்கட்சியின் தலைவர் அகமது ஸாஹிட் ஹமிடி சாடியுள்ளார்.
அம்னோவின் வருடாந்திர பொதுக் கூட்டம் நேற்று தொடங்கியது. அந்த இரண்டு நாள் கூட்டத்தில் தொடக்க உரையாற்றிய ஸாஹிட், நாட்டின் ஆகப் பெரிய அரசியல் கட்சியான அம்னோ, அடுத்த தேர்தலில் நான்கு கட்சி கூட்டணியான தேசிய முன்னணியைத் தலைமையேற்று வழிநடத்த ஆயத்தமாக வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.
மலேசியாவில் பெரும்பான்மையாக இருக்கும் மலாய்க்காரர்களை பெர்சத்து, அம்னோ, 'பாஸ்' ஆகிய கட்சிகள் பிரதிநிதிக்கின்றன. அம்மூன்று கட்சிகளும் இணைந்து 'பெரிக்கத்தான் நேஷனல்' எனும் கூட்டணியை அமைத்தன.
இப்போது அதிகாரபூர்வமாக அக்கூட்டணியில் அம்னோ இடம்பெறவில்லை என்றாலும் பிரதமர் முகைதீன் தலைமையிலான அரசாங்கத்திற்கு ஆதரவு அளித்து வருகிறது.
இதனிடையே, 'பாஸ்' கட்சியைத் தன்னுடைய உண்மையான பங்காளி எனக் குறிப்பிட்டுள்ள ஸாஹிட், அக்கட்சியும் பெர்சத்து உடனான கூட்டணியில் இருந்து விலக வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
'பாஸ்' கட்சித் தலைவர் அப்துல் அவாங் ஹாடியை மேடையில் வைத்துக்கொண்டே அவர் இந்தக் கோரிக்கையை முன்வைத்தது குறிப்பிடத்தக்கது.
கொவிட்-19 பரவல் காரணமாக மலேசியாவில் பிறப்பிக்கப்பட்டுள்ள அவசரநிலை ஆகஸ்ட் மாதத்துடன் முடிவிற்கு வந்ததும் அங்கு பொதுத் தேர்தல் நடத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
பிரதமர்: 222 தொகுதிகளில் அம்னோ போட்டியிட்டால் பெர்சத்துவும் போட்டியிடும்
முன்னதாக, பொதுத் தேர்தலுக்கான தொகுதி உடன்பாடு தொடர்பில் அம்னோ பேச்சுவார்த்தைக்கு இடமளிக்காமல் இருப்பதாக பெர்சத்து தலைவரான திரு முகைதீன் நேற்று முன்தினம் செய்தியாளர் கூட்டத்தில் கூறி இருந்தார்.
மொத்தமுள்ள 222 நாடாளுமன்றத் தொகுதிகளிலும் அம்னோ போட்டியிட முடிவு செய்தால் பெர்சத்துவும் அவ்வாறு செய்யும் என்று அவர் குறிப்பிட்டார்.
"அம்னோ அதனை விரும்பினால் நாங்களும் அவ்வாறே செய்வோம். இதனால் நான் ஒருபோதும் பெருமிதம் கொள்ளவோ ஆணவம் கொள்ளவோ இல்லை. வருடாந்திர பொதுக் கூட்டத்தில் அம்னோ கூறிய கருத்துகள் எனக்குப் புரிகிறது. இதற்கு முன்பு நானும் இதே நிலையில் (அம்னோ துணைத் தலைவராக) இருந்தேன். மோதலை நான் எதிர்கொள்ள விரும்பவில்லை," என்று பிரதமர் முகைதீன் யாசின் விவரித்தார்.

