கணினிவியல் தொடர்பான ஆய்வு, கல்வி ஆகியவற்றுக்காக சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்துக்கு (என்யுஎஸ்) உள்ளூர் தொழில்நுட்ப நிறுவனமான 'சீ' $50 மில்லியன் நன்கொடை வழங்கியுள்ளது. இதுவே ஒரு நிறுவனத்திடமிருந்து சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்துக்குக் கிடைத்திருக்கும் ஆகப் பெரிய நன்கொடையாகும். இணைய வர்த்தகத் தளங்களான ஷாப்பீ, விளையாட்டு மேம்பாட்டாளரான கரினா ஆகியவை 'சீ' நிறுவனத்துக்குச் சொந்தமானவை. என்யுஎஸ் கணினிவியல் பள்ளி இந்த நிதியைப் பயன்படுத்தும். அப்பள்ளியில் ஏறத்தாழ 4,200 பட்டக்கல்வி மாணவர்களும் 1,020 மதுகலை மற்றும் முனைவர் பட்ட மாணவர்களும் உள்ளனர். செயற்கை நுண்ணறிவு, தரவு விஞ்ஞானம் போன்ற விரைவாக வளர்ந்து வரும், முக்கியமான துறைகள் தொடர்பான ஆய்வு மற்றும் கல்விக்கு நிதி பயன்படுத்தப்படும் என்று என்யுஎஸ் தலைவர் டான் எங் சாய் இன்று தெரிவித்தார். நன்கொடை தொடர்பாக என்யுஎஸ் - 'சீ' நிறுவனம் இடையிலான கையெழுத்திடும் நிகழ்ச்சி இன்று பல்கலைக்கழகத்தின் கென்ட் ரிஜ் வளாகத்தில் நடைபெற்றது. அதில் கல்வி அமைச்சர் லாரன்ஸ் வோங் கலந்துகொண்டார். தொழில்நுட்பத் துறையை மேம்படுத்த அரசாங்கம் மேற்கொண்டு வரும் முயற்சிகளுக்கு 'சீ' நிறுவனத்தின் பங்களிப்பு ஆதரவுக் கரம் நீட்டும் என்று அவர் கூறினார்.
என்யுஎஸ் கணினிவியல் பள்ளிக்கு உள்ளூர் நிறுவனம் $50 மில்லியன் நன்கொடை
1 mins read
கையெழுத்திடும் நிகழ்ச்சியில் (இடமிருந்து வலம்) 'சீ' நிறுவனத்தின் நிறுவனர் திரு ஃபோரஸ்ட் லீ, கல்வி அமைச்சர் லாரன்ஸ் வோங், என்யுஎஸ் தலைவர் டான் எங் சாய். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

