மலேசியத் தலைநகர் கோலாலம்பூருக்கும் சிங்கப்பூருக்கும் இடையே அதிவேக ரயில் சேவையைத் தொடங்க திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் அந்தத் திட்டம் கைவிடப்பட்டதை அடுத்து, அதற்காக சிங்கப்பூருக்கு ஏற்பட்ட செலவினத்துக்கு இழப்பீட்டுத் தொகையாக $102.8 மில்லியனை மலேசியா வழங்கியுள்ளது.
சிங்கப்பூருக்கு வழங்கப்படும் இழப்பீட்டுத் தொகையை இரு நாடுகளும் கலந்து பேசி முடிவெடுத்துவிட்டதாக போக்குவரத்து அமைச்சர் ஓங் யி காங் இன்று கூறினார்.
சிங்கப்பூருக்கு வழங்கப்படும் இழப்பீட்டுத் தொகை குறித்து இரு நாடுகளும் நட்புறவுடன் இணக்கம் கண்டதாக போக்குவரத்து அமைச்சும் மலேசியப் பிரதமர் அலுவலக அமைச்சும் தெரிவித்தன.
"இருநாடுகளின் மக்களுக்கும் நன்மை பயக்கும் வகையில் நட்புறவு, நெருங்கிய ஒத்துழைப்பு ஆகியவற்றைத் தொடர்வதில் சிங்கப்பூரும் மலேசியாவும் கடப்பாடு கொண்டுள்ளன," என்று போக்குவரத்து அமைச்சும் மலேசியப் பிரதமர் அலுவலக அமைச்சும் வெளியிட்ட கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.
"இந்த விவகாரத்துக்கு நட்புறவுடன், சுமுகமான வகையில் தீர்வு காணப்பட்டுள்ளது மகிழ்ச்சியைத் தருகிறது. இருநாடுகளுக்கிடையிலான நல்லுறவு பாதிப்படையாத வகையில் தீர்வு காணப்பட்டுள்ளது.
"எதிர்காலத்தில் சிங்கப்பூரும் மலேசியாவும் இணைந்து செயல்பட பல வாய்ப்புகள் உள்ளன. இரு நாடுகளுக்கிடையிலான விமானச் சேவையை மீண்டும் தொடங்குவது, ஜோகூர் பாலத்தை மீண்டும் போக்குவரத்துக்குத் திறந்துவிடுவது போன்றவை இவற்றில் அடங்கும்," என்று போக்குவரத்து அமைச்சர் ஓங் யி காங் தமது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டார்.
கடந்த ஜனவரி மாதம் 1ஆம் தேதியன்று இருநாடுகளுக்கிடையிலான அதிவேக ரயில் சேவை கைவிடப்படுவதாக பிரதமர் லீ சியன் லூங்கும் மலேசியப் பிரதமர் முகைதீன் யாசினும் அறிவித்தனர்.
அதிவேக ரயில் சேவை தொடர்பாக மலேசியா முன்வைத்த மாற்றங்களுக்குக் கடந்த ஆண்டு டிசம்பர் 31ஆம் தேதி வரை நிர்ணயிக்கப்பட்டிருந்த கால அவகாசத்துக்குள் உடன்பாடு காண முடியாததை அடுத்து திட்டம் கைவிடப்பட்டது.
அதிவேக ரயில் சேவைக்காக சிங்கப்பூர் ஏறத்தாழ $270 மில்லியன் செலவு செய்திருந்ததாகவும் திட்டம் கைவிடப்பட்டதால் ஒப்பந்தப்படி சிங்கப்பூருக்கு மலேசியா இழப்பீட்டுத் தொகை வழங்க வேண்டும் என்றும் கடந்த ஜனவரி மாதம் 4ஆம் தேதியன்று அமைச்சர் ஓங் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

