நாட்டின் சுகாதாரப் பராமரிப்பு முறை, மீள்திறன் மிக்கதாக இருப்பதன் முக்கியத்துவத்தை கொவிட்-19 உணர்த்தியதாக துணைப் பிரதமர் ஹெங் சுவீ கியட் கூறியுள்ளார்.
ஐம்பதே நாட்களில் சிங்கப்பூர் பொது மருத்துவமனை அதன் கார்பேட்டை ஒன்றை, முழுக்க முழுக்க ஒரு கொவிட்-19 தனிமைப்படுத்தல் இடமாக மாற்றியது. கடந்த ஓராண்டாக சிங்கப்பூரின் சுகாதாரப் பராமரிப்பு முறை மீள்திறனுடனும் புத்தாக்கத்துடனும் செயல்பட்டதற்கு இது ஓர் உதாரணம் என்று மருத்துவமனையின் 200வது ஆண்டு நிறைவு கொண்டாட்டத்தின்போது குறிப்பிட்டார் திரு ஹெங்.
தற்போதைய கொள்ளைநோய் நெருக்கடியிலிருந்து சிங்கப்பூர் கற்றுக்கொண்டு அதன் ஆற்றல்களை மேலும் வலுப்படுத்தியவாறு இனி வரக்கூடிய கொள்ளைநோய்களுக்குத் தயாராக வேண்டும் என்றார் அவர். 'டிசீஸ் எக்ஸ்' (Disease X) எனப்படும் அதிகம் அறியப்படாத நோயைச் சமாளிக்க, கொவிட்-19 நெருக்கடியை நாம் படிப்பினையாகக் கொண்டு நம்மை மேலும் தயார்படுத்திக்கொள்ள வேண்டும் என்றார்.
இணையத்தில் நடைபெற்ற கொண்டாட்ட நிகழ்வில் கலந்துகொண்ட திரு ஹெங், அர்ப்பணிப்பு, கடப்பாடு கொண்டுள்ள மருத்துவமனை ஊழியர்களுக்குத் தமது பாராட்டைத் தெரிவித்தார்.
"நிச்சயமற்ற சூழல் உருமாறி வந்த நிலையிலும், துணிச்சலுடன் அதைச் சந்தித்து, மாற்றங்களை ஏற்று, புத்தாக்க உத்திகளை நீங்கள் கையாண்டது மகிழ்ச்சி அளிக்கிறது," என்றார் அவர்.
மரக் கொட்டகையாக 1821ல் ஆரம்பிக்கப்பட்ட சிங்கப்பூர் பொது மருத்துவனை, ஐரோப்பியர்களுக்கு மட்டுமே அப்போது இயங்கியது. அடுத்த 60 ஆண்டுகளில் மருத்துவமனை ஐந்து முறை இடம் மாறி மீண்டும் கட்டப்பட்டது.
பின்னர், ஊட்ரம் பகுதியிலுள்ள அதன் நிரந்தர இடத்திற்கு 1880களில் சென்றது. வெவ்வேறு இனங்கள், சமூகப் பின்னணிகளுடைய ஆண்கள், பெண்கள், குழந்தைகள் ஆகியோருக்கான வசதிகளைக் கொண்டு மருத்துவமனை படிப்படியாக விரிவுபடுத்தப்பட்டது.
சுதந்திரம் பெற்ற சிங்கப்பூர், மருத்துவமனைக்கு வளங்கள் வழங்கி கட்டடத்தை மறுவடிவமைத்து மேலும் புதிய மருத்துவப் பிரிவுகளைச் சேர்த்தது. இன்று இந்தப் பொது மருத்துவமனை உலகத் தரம் வாய்ந்த ஒன்றாகத் திகழ்கிறது.
இருப்பினும், சிங்கப்பூரின் சுகாதாரப் பராமரிப்பு உருமாற்ற முயற்சிகள் இன்னும் முடிவடையவில்லை என்றார் திரு ஹெங்.
சுகாதாரப் பராமரிப்பு வழங்குவதிலிருந்து ஆரோக்கிய வாழ்க்கைமுறையை ஊக்குவிக்கும் முயற்சிகளில் நாடு கவனம் செலுத்துவதாக அவர் கூறினார். பலதுறை மருந்தகங்கள், மருத்துவமனைகள் என அனைத்து மருத்துவக் கழகங்களிடையே ஒத்துழைப்பு வலுப்பட வேண்டும் என்பதற்காக சிங்கப்பூர் திட்டமிடுகிறது. அறிவியல், தொழில்நுட்பம் ஆகியவற்றில் முதலீடுகள் செய்து வருவதன் மூலம் சுகாதாரப் பராமரிப்புத் துறையில் புத்தாக்கத்தை புகுத்தவும் முயன்றுவருவதாக சொன்னார் துணைப் பிரதமர்.
அனைத்து சிங்கப்பூரர்களுக்கும் குறைந்த கட்டணத்தில், பொருத்தமான, தரமான சுகாதாரப் பராமரிப்புச் சேவைகள் கிட்டுவதில் அரசாங்கம் கடப்பாடு கொண்டுள்ளதையும் அவர் வலியுறுத்தினார். துடிப்பான, ஆரோக்கியமான வாழ்க்கைமுறைக்கு சிங்கப்பூரர்கள் கூடுதல் முக்கியத்துவம் தருமாறு துணைப் பிரதமர் ஹெங் மக்களுக்கு அழைப்பு விடுத்தார்.

