வடக்கு-தெற்கு ரயில் வழித்தடத்தில் ஏற்பட்ட சமிக்ஞை கோளாறு இன்று காலை ஏறத்தாழ 5 மணி நேரம் நீடித்தது. ராஃபிள்ஸ் பிளேஸ் நிலையத்திற்கும் பீஷான் நிலையத்திற்கும் செல்ல 45 நிமிடங்கள் தாமதமாகும் என்று இன்று காலை 7.30 மணிக்கு எஸ்எம்ஆர்டி நிறுவனம் தனது டுவிட்டரில் தெரிவித்தது. நியூட்டன் நிலையத்திற்கும் சிட்டிஹால் நிலையத்திற்கும் இடையில் கோளாறு ஏற்பட்டது. அதிகாலை 5.47 மணிக்கு அது பற்றி டுவிட்டரில் எஸ்எம்ஆர்டி தெரிவித்தது. இலவச இடைவழிப் பேருந்து சேவைகளுக்கு ஏற்பாடு செய்யப் பட்டது. சமிக்ஞை முறையில் மென்பொருள் பிரச்சினை காரணமாக கோளாறு ஏற்பட்டது என்பது முதற்கட்ட புலன்விசாரணை மூலம் தெரியவந்ததாக நிலப் போக்குவரத்து ஆணையம் அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டது. அந்த சமிக்ஞை முறையை அமைத்த 'தால்ஸ்' என்ற நிறுவனம் கோளாறைச் சரிப்படுத்தியதாக எஸ்எம்ஆர்டி பிறகு தெரிவித்தது. காலை சுமார் 10 மணிக்கு சமிக்ஞை முறை சரிப்படுத்தப்பட்ட பிறகு சுமார் 10 நிமிட நேரத்துக்கு தோ பாயோவுக்கும் மரினா சவுத் பியருக்கும் இடையில் ரயில் சேவை இல்லை. காலை உச்சநேரத்தில் ரயில்களை இயங்குமாறு செய்து பிறகு தொழில்நுட்ப கோளாறுகளைச் சரிசெய்துகொள்ள தான் விரும்பியதாகவும் எஸ்எம்ஆர்டி கூறியது. குறைபாடுகள் காலை 10.10 மணிக்குச் சரிசெய்யப்பட்டுவிட்டதாகவும் ரயில் சேவைகள் மீண்டும் வழக்கநிலைக்குத் திரும்பிவிட்டதாகவும் முற்பகல் 11.30க்கு எஸ்எம்ஆர்டி கூறியது. இதனிடையே, காத்திப் நிலையத்தில் காலை 7.30 மணிக்கு ரயிலில் ஏறிய அர்ஜுன் நாயர், 26, என்ற பாதுகாப்புத் துறை அதிகாரி, அங் மோ கியோ நிலையத்தில் 10 நிமிடம் தாமதமாகத் தரையிறங்கினார். நடைமேடையில் பயணிகள் நிரம்பி இருந்ததாக அவர் கூறினார். தோ பாயோ செல்வதற்கு வழக்கமான நேரத்தைவிட 30 நிமிடங்கள் அதிக நேரம் ஆகியது என்றும் நொவினாவில் தான் தரையிறங்கியபோது நடைமேடையில் குழப்பமான நிலை காணப்பட்டதாகவும் அவர் கூறினார். "இலவச பேருந்துகளும் இல்லாமல் போனதால் கூட்டம் அதிகமாக இருந்தது. டாக்சிகளுக்கும் வாடகைக் கார்களுக்கும் அதிகம் பேர் காத்திருந்தனர்," என்றாரவர். திரு நாயர் வழக்கமான பேருந்து சேவைகள் மூலம் பூகிஸ் சென்றார். அங்கிருந்து வாடகை கார் மூலம் தஞ்சோங் பகார் செல்ல இருந்ததாகவும் அவர் கூறினார். நேற்றைய சேவை தடையையும் சேர்த்து இரண்டு நாட்களில் மொத்தம் இரண்டு தடவை சமிக்ஞை முறை கோளாறுகள் ஏற்பட்டு இருக்கின்றன. எஸ்பிஎஸ் டிரான்சிட் நிறுவனம் நிர்வகித்து நடத்தும் வடக்கு-கிழக்கு ரயில் வழித்தடத்தில் நேற்று காலையில் மின்சாரக் கோளாறு காரணமாக ஏறத்தாழ 3 மணி நேம் சேவை பாதிக்கப்பட்டது. இதனிடையே, பயணிகளுக்கு ஏற்பட்ட சங்கடங்களுக்காக மன்னிப்பு கேட்டுக்கொண்ட நிலப் போக்குவரத்து ஆணையம், இத்தகைய இடையூறுகள் ஏற்படும்போது அதற்கான மூல காரணங்களை கண்டுபிடிக்கும் முயற்சிகளை மேற்கொண்டு மறுபடியும் அவை ஏற்படாமல் இருக்க உறுதியான நடவடிக்கைகளை தொடர்ந்து எடுத்து வரப்போவதாக அறிவித்தது. ரயில் சேவையின் நம்பகத்தன்மையை நிலைநாட்டி வருவது என்பது தொடர்ந்து இடம்பெற்று வரும் ஒரு பணி என்றும் போக்குவரத்து ஆணையம் சுட்டிக்காட்டியது.
வடக்கு-தெற்கு ரயில் பாதை:காலையில் 5 மணி நேரம் நீடித்த சமிக்ஞை கோளாறு
2 mins read
பீஷான் நிலையத்தில் இன்று காலை 7.50 மணிக்கு வடக்கு- தெற்கு வழித் தடத்திலிருந்து வட்டப்பாதை ரயில் சேவைக்கு மாறிய பயணிகள்.படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

