தனிமை உத்தரவு இல்லாத பயணத்திற்கு முதல் படி

தனிமை உத்தரவு இல்லாத பயணத்திற்கு முதல் படி

2 mins read

தடுப்பூசிச் சான்றிதழ் குறித்த பேச்சுவார்த்தை

கொவிட்-19 தடுப்­பூ­சிச் சான்­றி­த­ழுக்கு இரு­த­ரப்பு அங்­கீ­கா­ரம் அளிப்­பது தொடர்­பி­லான பேச்­சு­வார்த்தை, தனிமை உத்­த­ரவு தேவைப்­படாத பய­ணங்­களை மீண்­டும் தொடங்­கு­வதற்­கான முதல் படி என்று சிங்­கப்­பூர் போக்கு­வ­ரத்து அமைச்சு கூறி­யுள்­ளது.

கொவிட்-19 பரி­சோ­தனை, தட­ம­றி­தல், சமூக இடை­வெளி நடை­மு­றை­கள் ஆகிய நடவடிக்கைகள் மூலம் நோய்ப் பர­வ­லைக் கட்­டுக்­குள் வைத்­தி­ருக்­கும் நாடு­க­ளு­ட­னும் வட்­டா­ரங்­க­ளு­ட­னும் புதிய பயண ஏற்­பா­டு­க­ளைத் தொடங்­கு­வதற்­கான வழி­மு­றை­க­ளைத் தான் ஆராய்ந்து வரு­வ­தாக அமைச்சு நேற்று தெரி­வித்­தது.

கொவிட்-19 தொற்று விகிதத்­தை குறைக்க தடுப்­பூசி உத­வு­வ­தாக போக்­கு­வ­ரத்து அமைச்சின் பேச்­சா­ளர் ஒரு­வர் கூறி­னார்.

அனைத்­து­லக சிவில் விமா­னப் போக்­கு­வ­ரத்து அமைப்­பி­லும் இரு நாடு­க­ளுக்கு இடை­யி­லும் தடுப்­பூ­சிச் சான்­றி­தழ் குறித்த பேச்­சு­வார்த்­தையை நடத்தி முடிக்க சற்று காலம் எடுக்­கும் என்று அவர் சொன்­னார். கார­ணம், பெரும்­பா­லான இடங்­களில் தற்­போ­து­தான் தடுப்­பூ­சித் திட்­டம் தொடங்­கப்பட்டுள்­ளது என்றும் தடுப்­பூ­சிச் சான்­றி­தழ் பற்றி அவை ஆராய்ந்து வரு­வ­தா­க­வும் அப்­பேச்­சா­ளர் குறிப்­பிட்­டார்.

"எங்­க­ளது பங்­கா­ளித்­துவ நாடு­கள் அல்­லது வட்­டா­ரங்­க­ளு­டன் இது தொடர்­பி­லான பேச்­சு­வார்த்தை குறிப்­பி­டத்­தக்க முன்­னேற்­றம் அடைந்­த­வு­டன் இது­கு­றித்த மேல் அறி­விப்­பு­களை நாங்­கள் வெளி­யி­டு­வோம்," என்று அப்­பேச்­சா­ளர் கூறி­னார்.

எல்­லை­க­ளைப் பாது­காப்­பாக திறக்க ஹாங்­காங்­கி­டம் இருந்து கிடைத்த பரிந்­து­ரையை சிங்­கப்­பூர் ஆராய்ந்து வரு­வ­தாக போக்­கு­வ­ரத்து அமைச்­சர் ஓங் யி காங் நேற்று முன்­தி­னம் கூறி­யி­ருந்­தார்.

மின்னிலக்கத் தடுப்பூசிக் கடப்பிதழ் முறையை உருவாக்குவது குறித்து கலந்து ஆலோசிக்க தாம் சிங்கப்பூருக்கு பயணம் மேற்கொள்வது குறித்த திட்டங்களை ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்துறை அமைச்சர் இந்த மாதம் 15ஆம் தேதி அறிவித்திருந்தார்.